தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அதிகளவில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரவி வந்தது. தொடர்ந்து இப்படியான செய்திகள் வெளிவந்ததால் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது.


இதையடுத்து, இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காணொளி வாயிலாக தகவல் வெளியிட்டார். 


தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டார். அதில், வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள்.  அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். 


டெல்லி விரைந்த தமிழ்நாடு காவல்துறை:


இந்தநிலையில், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக வதந்தி பரப்பிய உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவை பிடிக்க தமிழ்நாடு காவல்துறையினர் டெல்லி விரைந்துள்ளனர்.


தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் பிரசாந்த் உமாராவ் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவரை கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ், காவல் ஆய்வாளர் அய்யப்பன் உள்ளிட்ட 7 காவல்துறை அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 


அதேபோல், பொய் தகவலை பரப்பிய டைனிக் பாஸ்கர் மற்றும் பாட்னாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் முகமது தன்வீர் ஆகியோர் மீதும் தமிழ்நாடு காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். 


பாதுகாப்பு உறுதி:


முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோவில், “சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ தவறானது. தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பீகாரில் ஒருவர் தவறான வீடியோக்களை வெளியிடுகிறார். திருப்பூர் மற்றும் கோவையில் முந்தைய தேதியில் இந்த சம்பவங்கள் நடந்ததால் இரண்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஒன்று பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இரு குழுக்களுக்கிடையேயான மோதல், மற்றொன்று கோயம்புத்தூரில் உள்ளூர்வாசிகள் இருவர் இடையே ஏற்பட்ட மோதலிலிருந்து வந்தது” என்று தெரிவித்தார். 


தொடர்ந்து, வடமாநிலத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். அதில், “தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம், பாதுகாப்பற்றவர்களாக உணர வேண்டாம். தமிழக மக்கள் மிகவும் நல்லவர்களாகவும், நட்பானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது” என்றார்.