சமீப காலமாகவே, விமான நிலையங்களில் தொடர் சர்ச்சை அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.


சர்ச்சை மேல் சர்ச்சை:


இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.


இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வரும் சூழலில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்திய பயணி ஒருவர் நேற்று சென்றுள்ளார். அப்போது, குடிபோதையில் இருந்த அவர் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.


குற்றம் சாட்டப்பட்டவர் 21 வயதான ஆர்யா வோஹ்ரா, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டு, விமான நிறுவனத்தால் தடை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற விமானம் AA292. 


இந்திய மாணவர் செய்த காரியம்:


பயணி ஒருவர் இடையூறு விளைவிக்க டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய உடன், உள்ளூர் அதிகாரிகள் விமானத்தில் ஏறி விசாரித்துள்ளனர். இரவு 9.50 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணி அதிக போதையில் இருந்ததாகவும், விமானத்தில் இருந்த பணியாளர்களின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்கவில்லை என்றும் விமான அதிகாரி தெரிவித்தார். 


விமான குழுவிடம் அந்த நபர் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உட்காராமல் தொடர்ந்து இடையூறு விளைவித்தார். விமான குழுவினர் மற்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தினார். சக பயணிகளின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவித்தார். இறுதியாக, 15ஜியில் அமர்ந்திருந்த பயணி மீது சிறுநீர் கழித்தார்.


விமான நிறுவனம் விளக்கம்:


அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானி, விமானத்தில் இருந்த பிரச்னைக்குரிய பயணி குறித்து விமானம் தரையிறங்குவதற்கு முன்பே டெல்லி ஏடிசியை தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரினார். தேவையான நடவடிக்கை கோரி மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு (சிஐஎஸ்எஃப்) தகவல் தெரிவிக்கப்பட்டது. 


விமானம் தரையிறங்கிய பிறகு, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பணியாளர்கள் அவரை விமானத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். இருப்பினும், அந்த பயணி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களிடம் தவறாக நடந்து கொண்டார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து டெல்லியின் மூத்த காவல்துறை அதிகாரி பேசுகையில், "இச்சம்பவத்தை கவனித்த விமான நிலைய போலீசார், பயணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. நாங்கள் தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.


இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அதிகாரி கூறுகையில், "இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனமும் விமான நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது.


சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது. அவர்கள் நிலைமையை தொழில் ரீதியாக கையாண்டதாகவும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது" என்றார்.