பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் நிகழ்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்று ரயில்கள். சாமானிய மக்கள் முதல் மிகப்பெரிய வசதி படைத்தவர்கள் வரை ரயில் பயணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று தான். குறைவான கட்டணம், அலுப்பில்லாத பயணம், குறித்த நேரத்தில் சென்றடையலாம் என பல காரணங்களால் ரயில் பயணத்தை தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். கோடிக்கணக்கில் வருவாய் தரும் ரயில்வே துறையில் பொதுமக்கள் வசதிக்காக புறநகர் மின்சார ரயில் தொடங்கி தற்போதைய வந்தே பாரத் வரை விதவிதமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய பயணத்தில் சில ரயில்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குவது வழக்கம். முறையற்ற தண்டவாள பராமரிப்பு, ஊழியர்களின் கவனக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் ரயில் விபத்தானது ஏற்படுகிறது. நடப்பாண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் அருகே 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்தை கண்டு இந்திய மக்களே சோகத்தில் உறைந்தனர்.
இப்படியான நிலையில் மீண்டும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. நேற்று (அக்டோபர் 11) இரவு 9.30 மணியளவில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில் விடிய விடிய நடவடிக்கைகள் தொடர்ந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற மத்திய அமைச்சரும், பக்சர் தொகுதி எம்பியுமான அஸ்வினி சௌபே கூறுகையில், "இது ஒரு சோகமான சம்பவம். ரயில் விபத்தில் 4 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்” என தெரிவித்தார். மேலும், “இந்த சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். அருகிலுள்ள மக்கள் மீட்பு பணியில் வந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன். விபத்து பின்னணியில் உள்ள காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இந்நிலையில் ரயில் விபத்தில் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான ரயிலில் உள்ள பயணிகள் வேறொரு சிறப்பு ரயிலுக்கு மாற்றப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.