நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீட்டில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி, அதன் தலைமை செய்தி ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவையும் நிறுவனத்தின் மனித வள பிரிவு தலைவர் அமித் சக்ரவர்த்தியையும் கைது செய்தனர்.
உபா சட்டம்:
நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறி, உபா (சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தி, பத்திரிகையாளரை கைது செய்ததற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்திய இறையாண்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நோக்கில் வெளிநாட்டு இருந்து இந்தியாவுக்கு கோடி கணக்கில் இந்திய நிறுவனங்களாலும் வெளிநாட்டு நிறுவனங்களாலும் பணம் கொண்டு வரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் உபா சட்டம் பதிவு செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என நியூஸ்கிளிக் தெளிவுப்படுத்தியுள்ளது.
நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு மேலும் சிக்கல்:
இந்த நிலையில், நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிராகவும் அதன் இயக்குநருக்கு எதிராகவும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் சிபிஐ புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் தலைமை செய்தி ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா வீட்டில் இன்றும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "எஃப்சிஆர்ஏ விதிகளை மீறி நான்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் 28.46 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றதாக நியூஸ்கிளிக் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், 9.59 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை அந்நிய நேரடி முதலீடு என தவறாக வகைப்படுத்தி பணம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. நியூஸ்கிளிக் இயக்குனர், அவருக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாகக் கூறப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கை:
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து சுதந்திரமான ஊடக நிறுவனங்களை செயல்பட விடாமல் தடுப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மத்திய அரசை விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு தி வயர் நிறுவனத்தின் ஆசிரியர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சமீபத்தில், புகழ்பெற்ற பிபிசி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையும் படிக்க: Rajasthan Election: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதியில் மாற்றம்.. இதான் காரணமா?