மணிப்பூரில் கடந்த 6 மாதங்களாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பான்மையான மெய்தி சமூக மக்களுக்கும் பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.


தேசத்தை உலுக்கிய மணிப்பூர் கலவரம்:


மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அறங்கேறிய வண்ணம் இருக்கிறது.


இந்த நிலையில், இரண்டு மாணவர்கள் காணாமல் போன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி 33 மணி நேரத்திற்கு பந்த் அறிவித்தது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கில் உள்ள அகம் அவாங் லைகாய் பகுதியில் இரண்டு மாணவர்கள் காணாமல் போனதை தொடர்ந்து ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி தொடங்கப்பட்டது.


முதலில், பந்த் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும் என்று திட்டமிடப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், காணாமல் போன இரண்டு மாணவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய காவல்துறை தவறியதால், பந்த் நேற்று பிற்பகல் 1 மணி வரை நீட்டிக்கப்பட்டது.


கடத்தப்பட்டார்களா மாணவர்கள்?


பந்த் முடிவதற்குள் காணாமல் போன இரு மாணவர்கள், எங்கே இருக்கிறார்கள் என்பதை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என ஆக்சன் கமிட்டி எச்சரித்திருந்தது. ஆக்சன் கமிட்டிக்கு சிவில் சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


பந்த் காரணமாக, கல்வி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று முன்தினம், ஒரு சில வாகனங்கள் மட்டும் அவசர தேவைக்காக இயக்கப்பட்டது. ஆனால், சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டன.


மாணவர்கள் காணாமல் போன விவகாரத்தில் இதுவரை மணிப்பூர் போலீசார் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து அவர்களது மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் இருக்கும் இடம் குறித்து எந்த ஒரு தகவலையும் வழங்க அரசாங்கம் தவறிவிட்டது. இருப்பினும், மணிப்பூரின் மலை மாவட்டங்களில் பந்த், எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.