பள்ளியில் சக மாணவிடம் பேசிய மாணவனின் விரலை இளைஞர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
மாணவர் விரலை வெட்டிய இளைஞர்:
டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் பள்ளி மாணவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியின் துவாரகா தெற்கு பகுதியில் இருக்கும் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவர் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவர் விரல் திடீரென வெட்டப்பட்டிருப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து விசாரித்துள்ளனர். அதற்கு பாதிக்கப்பட்ட மாணவன் பைக் சங்கிலியில் கை மாட்டியதில் விரல் அறுப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், மாணவருக்கு சிகிச்சை அளிக்கும் போது சந்தேகப்பட்ட மருத்துவர், அடிபட்டதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது மாணவரின் விரல் துண்டானது ஒரு இளைஞரின் வெறிச்செயல் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மருத்துவர் மாணவனின் பெற்றோரிடம் கூற அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம் என்ன?
பாதிக்கப்பட்ட மாணவன் தன்னுடன் டியூஷன் படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது அவரை தனியாக பூங்காவிற்கு அழைத்து சென்று விரலை வெட்டியுள்ளார். மேலும், அந்த மாணவியிடம் தொடர்ந்து பேசினால் குடும்பத்தையும் தாக்குவேன் என அந்த மாணவர் மிரட்டியுள்ளார். இது மட்டுமில்லாமல் மாணவரை கற்களால் தாக்கியும் உள்ளார். இது குறித்து அறிந்த பெற்றோர் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும், பட்டம் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. மாணவரை தாக்கிய புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். சக தோழியிடம் பேசியதால் மாணவன் விரல் துண்டாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: Watch Video: பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை! ஜனாதிபதி வந்த நேரத்தில் கைவரிசை!