உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை லிஃப்டில் வைத்து வீட்டு உரிமையாளர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, விசாரணைக்கு பிறகு காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் செக்டார் 120 இல் ஹவுசிங் சொசைட்டியில் ஷெஃபாலி கவுல் என்பவர் வசித்து வந்தார். அவரது வீட்டில் அனிதா என்பவர் வீட்டு வேலை செய்துவந்தார். அனிதாவை ஷெஃபாலி கவுல், லிஃப்டில் இருந்து இழுத்து தாக்கியது வீடியோவில் பதிவாயுள்ளது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.


இதுதொடர்பாக அனிதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஷெஃபாலி மீது வழக்குப் பதிவு செய்தோம். இதையடுத்து, அவரை நேற்றிரவு கைது செய்தோம். விசாரணையில், வீட்டுக்கு செல்ல முயன்ற அவரை கட்டாயப்படுத்தி வீட்டு வேலை செய்ய வைத்தது தெரியவந்தது. 


அனிதாவின் உடலில் காயங்களும், கீறல்களும் உள்ளன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.






அனிதா கூறுகையில், "வெல்லக் கட்டியை சாப்பிட்டேன். இதற்காக என்னை வேலைக்கு வைத்த பெண் செருப்பால் அடித்தார். என்னை தீயிட்டுக் கொளுத்துவிடுவேன் என்றும் மாடியில் இருந்து கீழே தள்ளி விடுவேன் என்றும் மிரட்டினார் " என்றார்.


அனிதாவின் தந்தை கூறுகையில், "எனது மகளின் வீட்டு வேலை செய்வதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், எனது மகளை பிணைக் கைதி போல் அந்தப் பெண் கொடுமைப்படுத்தி வருகிறார்." என்றார்.