Noida: உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில், இரட்டைக் கோபுரங்களை இடிக்க 3500 கிலோ வெடி மருந்தை 15 நாட்களில்  நிரப்ப நிபுணர்குழு தயார் நிலையில் உள்ளது.  


உத்தர பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள  நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 40 மாடிகளை உடைய இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்களை ஆகஸ்ட் மாதம் 28க்குள்  இடித்து தரைமட்டமாக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.

இங்கு, நொய்டாவில் உள்ள 'சூப்பர்டெக்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம்,  40 மாடிகளை உடைய, 'எமரால்டு கோர்ட்' என்ற  இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது.  இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை கோபுர கட்டிடத்தினை இடிக்க உத்தரவிட்டது. 


அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சூப்பர்டெக் நிறுவனம். இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட  இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்க தீர்ப்பு அளித்தது. இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, 'எடிபைஸ் இன்ஜினியரிங்' எனும்  தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.  இதனால், கடந்த மே மாதம் கட்டடங்கள் இடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் திட்டமிட்டபடி இடிக்க முடியவில்லை. இதன்  காரணமாக மூன்று மாதம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், போபண்ணா அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 28ல் அதாவது ஆகஸ்ட் மாதம் 28ல்  இரட்டை கோபுரங்களை இடிக்க நீதிபதிகள் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளனர். ' ஒருவேளை எதிர்பாராத வானிலை மற்றும் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டால், அதிகபட்சமாக செப்டம்பர் மாதம் 4க்குள் கட்டிடத்தினைஇடித்து தரைமட்டமாக்க வேண்டும்' எனவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதனை அடுத்து ஹரியானா மாநிலாத்தில் இருந்து 3,500 கிலோ வெடி மருந்து கொண்டுவரப்பட்டு இரட்டை கோபுர கட்டிடத்தில் 9,400 துளைகளில் நிரப்பப்பட்டு வெடிக்கச் செய்து இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெடி மருந்துகளை 15 நாட்களுக்குள் கட்டிடத்தில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. காவல் துறையின் சார்பில் சுமார் 500 மீட்டருக்கு யாரும் உள் நுழையாதபடி ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.  இப்படியான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக ஒருபுறம் சென்றாலும், சூப்பர் டெக் நிறுவனம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண