நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடனான கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 தொகுதிகளில் போட்டியிடும் என, பாஜக தலைவர் எடியூரப்பா சொன்ன தகவலை குமாரசுவாமி மறுத்துள்ளார்.
பாஜக கருத்துக்கு குமாரசுவாமி மறுப்பு:
2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜக கூட்டணியில் சேர்ந்து கர்நாடகாவில் 4 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த கருத்தை தற்போது குமாரசுவாமி மறுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “'எடியூரப்பா பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து. மதச்சார்பற்ற ஜனதா தளம் இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் விவாதிக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக 2, 3 முறை சந்தித்துப் பேசினோம். என்ன நடக்கப்போகிறது? என பொறுத்திருந்து பார்ப்போம். மக்களின் முன் செல்வதற்கு ஒன்றுகூடி விவாதிப்போம். காங்கிரஸ் மாநிலத்தைக் கொள்ளையடிப்பதால் மக்களுக்கு இந்த கூட்டணி தேவை. மக்களுக்கு மாற்று வழிகள் தேவை. நான் 2006-ல் பாஜகவுடன் கைகோர்த்தேன். எனது 20 மாத ஆட்சி நிர்வாகத்தால் நல்லெண்ணம் உருவானது” என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற & சட்டமன்ற தேர்தல்:
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் 27-ஐ பாஜக கைப்பற்றியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் தான் அண்மையில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக மண்ணை கவ்வியது. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. பெரும் பின்னடவை சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாங்கு வங்கி, 18 சதவிகிதத்திலிருந்து 13 சதவிகிதமாக சரிந்தது. இந்த சூழலில் தான் பாஜக அடுத்த நாடாளுமன்ற தேர்தலை, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது.
நீடிக்கும் இழுபறி:
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க குமாரசுவாமி 5 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக தற்போது வரை 4 இடங்களை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த இருகட்சிகளின் கூட்டணி விவகாரம் தற்போது வரை இழுபறியாக நீடிக்கிறது. அதேநேரம், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தலாம் அல்லது தனித்து போட்டியிட்டாலும், இந்தமுறை காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலில் 15 முதல் 20 தொகுதிகளை வெல்லும் என, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.