PM Modi: வளமான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர்  மோடி தெரிவித்துள்ளார்.


"ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம்”


இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டின் முதல் நாள் இன்று. இந்த உச்சிமாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ”மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் வருத்தமடைகிறேன். அங்குள்ள மக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான சூழ்நிலையில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம். அனைத்து மக்களையும் உள்ளடங்கிய வளர்ச்சி என்பதை இந்தியாவின் கொள்கை.


வளமான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலக அளவில் எடுத்து செல்ல வேண்டும்.  உணவு, எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம் , இணைய பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி, நீர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.


”போரினால் இழந்த நம்பிக்கையை மீட்க வேண்டும்"


தொடர்ந்து பேசிய அவர், “ இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், இரண்டரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான தூண் உள்ளது, அதில் மனிதகுலத்தின் நலன் மற்றும் நலன் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாரத மண்ணிலிருந்து உலகம் முழுவதற்கும் கொடுக்கப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டின் இந்த நேரம் முழு உலகிற்கும் ஒரு புதிய திசையை அளிக்கிறது. பழமையான சவால்கள் நம்மிடம் இருந்து புதிய தீர்வுகளைக் கோரும் காலம் இது.


 கொரோனாவுக்கு பிறகு, நம்பிக்கையின்மையால் உலகில் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டு உலகிற்கு ஒரு புதிய திசையைக் காட்ட ஒரு முக்கியமான நேரம் இது. நாம் அனைவரும் புதிய சவால்களை நோக்கி சென்றிருக்கிறோம். எனவே, நமக்கான பொறுப்புகளை நிறைவேற்றி முன்னேற வேண்டும். கொரோனாவை நம்மால் தோற்கடிக்க முடிந்தது. அதேபோல, போரினால் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா பிரயாஸ் என்ற மந்திரம் நம் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையும்" என்றார் மோடி.


மேலும், "இந்தியாவில் G20 ஆனது சாதாரண மக்களின் G20 ஆக மாறியுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்கள் இதில் தொடர்புடையவர்கள். நாட்டின் 60க்கும் மேற்பட்ட நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றன. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை உறுதியாக உள்ளோம். இதன் காரணமாகவே, ஆப்பிரிக்க யூனியனை ஜி20 இல் சேர்க்க இந்தியா முன்மொழிகிறது. இந்த அறிவிப்பை ஒவ்வொரு நாடும் ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம். ஆப்பிரிக்காவின் பிரசிடென்சியின் நிரந்தர உறுப்பினராக இருக்கையில் அமர உங்களை  (அசாலி அசெளமனி) அழைக்கிறேன்.” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.