பணி நிறுவனங்களில் மாதவிடாய் விடுமுறை நாளைக் கட்டாயம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கும்போது, ’’தற்போதைய நிலையில், அனைத்து பணி இடங்களிலும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. எனினும் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானிய விலையில் சானிட்டரி நாப்கின்கள்
மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ், 10 முதல் 19 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஆஷா திட்டத்தில் மானிய விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் தேசிய சுகாதார மையம், நிதி உதவி செய்து மாநில அளவில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதேபோல ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின்கீழ், மத்தியக் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மாதவிடாய் சுகாதாரம் குறித்த சுகாதாரத்தை ஊரகப் பகுதிகளில் ஏற்படுத்தி வருகிறது.
மாதவிடாய்க் காலங்களில் ஒரு பெண்ணுக்குத் தேவைப்படும் ஓய்வு, அமைதி ஆகியவை நாடு முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. இதை அடுத்து பள்ளி, கல்லூரிகளில் மற்றும் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மாதத்துக்குக் குறிப்பிட்ட நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு
இதற்கு சில கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் செவி மடுத்துள்ள நிலையில், ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பைக் கட்டாயம் ஆக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும், ’’தற்போதைய நிலையில், அனைத்து பணி இடங்களிலும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளது’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.