ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் அதற்கு ராணுவம் பதிலடி கொடுப்பதும் அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


ஜம்மு காஷ்மீரில் பதற்றம்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2021ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தம் குறைவதற்கு முன்னர் பல தாக்குதல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை குழு(BAT), தற்போது நடந்துள்ள தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி கூறுகையில், "இது ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை. இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது" என்றார். எக்ஸ் தளத்தில் இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவில், "கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள கம்காரி, மச்சால் செக்டார் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டார். எங்கள் வீரர்கள் இருவர் காயமடைந்து மீட்கப்பட்டுள்ளனர். என்கவுண்டர் தொடர்ந்து வருகின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வார தொடக்கத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு சென்று ஊடுருவல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள படைகளின் தயார்நிலையை ஆய்வு செய்தார் ராணுவ தளபதி உபேந்திர திவேதி.


சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. 


 






ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.