பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லி ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் 9வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஜூலை 27) நடைபெற்று வருகிறது.


நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் முதல்வர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணித்தனர்.


என்ன காரணம்?


2024 பட்ஜெட்டில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சார்பாக குரல் எழுப்பப்பட்டது. இது "பழிவாங்கும் பட்ஜெட்" என்று எதிர்க்கட்சிகள் முன்னதாகவே நிதி ஆயோக் கூட்டப் புறக்கணிப்பை அறிவித்தன. 


எனினும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தனது மாநிலத்தின் பிரச்னைகளை, குரல்களை கூட்டத்தில் எடுத்துரைக்கச் செல்கிறேன் என்று மம்தா தெரிவித்திருந்தார். 


வெளிநடப்பு


எதிர்பாராத விதமாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த மம்தா, ‘’மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறினேன். நான் பேச விரும்பிய நிலையிலும் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். தொடர்ந்து என்னைப் பேச அனுமதிக்கவில்லை. என்னுடைய மைக் ஆஃப் செய்யப்பட்டது,10- 20 நிமிடங்கள் மட்டுமே நாம் பங்கேற்றேன்’’ என தெரிவித்தார். 


இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச அனுமதிக்கப்படாததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.






ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியே எதிர்க் கட்சிகள்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''இதுதான் கூட்டாட்சித் தத்துவமா? இதுதான் முதலமைச்சரை நடத்தும் விதமா?


நம் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியே எதிர்க் கட்சிகள் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். அமைதிப்படுத்த வேண்டிய எதிரிகளாக நடத்தக்கூடாது. கூட்டாட்சி முறை விவாதத்தைக் கோருகிறது. அனைத்துக் குரல்களையும் மதிக்கிறது'' என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.