உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அசைவு உணவு கொண்டு வரக்கூடாது என மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
பள்ளி விதியால் புது சர்ச்சை: இதையடுத்து, அசைவு உணவு கொண்டு வரக்கூடாது என கோரிக்கை மட்டுமே விதிக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நொய்டாவில் செக்டார் 132 பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பள்ளி நிர்வாகம் மெஸேஜ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "காலை வேளையில் மதிய உணவாக அசைவ உணவுகளை சமைத்தால் அது கெட்டுப்போக வாய்ப்புள்ளது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, குழந்தைகளின் மதிய உணவாக அசைவ உணவுகளை அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்களின் பன்முகத்தன்மையையும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையையும் பள்ளி மதிக்கிறது. அனைத்து மாணவர்களும் தங்கள் உணவு விருப்பங்களைப் பொருட்படுத்தாமல் ஒன்றாக அமர்ந்து உணவை உண்ணலாம். அனைவருக்கும் வசதியாக இருக்கும் சூழலை வழங்குவதில் பள்ளி கவனம் செலுத்துகிறது" என மெஸேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அசைவு உணவு சாப்பிடுவோருக்கு எதிராக பாகுபாடா? இது பிரச்னையாக வெடித்த நிலையில், இதுகுறித்து பள்ளியின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். "இது கோரிக்கை மட்டுமே" என அவர் தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் உணவில் இதுபோல பாரபட்சம் காட்டப்படுவதை ஏற்க முடியாது என்றும் அசைவ உணவு சாப்பிடுவோர் மீது பாகுபாடு காட்டும் வகையில் இந்த விதி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் லவ் ஜிகாத் தொடர்பாக அம்மாநில அரசு கொண்டு வந்த சட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.