இந்தியத் திருநாடு 1947ஆம் ஆண்டு அந்நியர்களிடம் இருந்து அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை கல்வித் துறையில் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த 77 ஆண்டுகளில், தொடக்க, உயர்,  ஆராய்ச்சிக் கல்வியில் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.


பாலின சமத்துவம் மற்றும் மொத்த சேர்க்கை விகிதம்


சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் பெண் கல்வி என்பதே, பெரும்பாலும் இல்லாத நிலைதான் நிலவியது. சிறுவர்களே கல்வி கற்கச் செல்லாத சூழலில், சிறுமிகளைப் பள்ளிக்கு அனுப்புவது பெற்றோர்களுக்கே கடினமான ஒன்றாகத்தான் இருந்தது. நாட்கள் செல்லச்செல்ல காட்சிகளும் மாறின. தற்போதைய புள்ளி விவரத்தின்படி, பள்ளிக் கல்வியில் மாணவர்களைவிட மாணவிகள்தான் அதிகம்பேர் இருக்கின்றனர்.


சில ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரத்தின்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில், ஒவ்வொரு மாணவனுக்கும் 1.02 என்ற அளவில் மாணவிகள் இருக்கின்றனர். 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில், ஒவ்வொரு மாணவனுக்கும் 1.01 என்ற அளவில் மாணவிகள் இருக்கின்றனர்.


எழுத்தறிவு வீதம்


சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில், அதாவது 1951-ல் 18.3 சதவீதமாக இருந்த எழுத்தறிவு, 2018ஆம் ஆண்டில் 74.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் எழுத்தறிவு வீதம் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. அப்போது 8.9 ஆக இருந்த எழுத்தறிவு வீதம், 65.8 ஆக அதிகரித்துள்ளது.





பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


சுதந்திரத்துக்குப் பிறகான ஒவ்வோர் அரசுகளும் பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் அதிகம் கவனத்தைச் செலுத்தின. அந்த காலகட்டத்தில் 1.4 லட்சம் பள்ளிகள் இருந்த நிலையில்,2020- 21ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல 1950-51ஆம் ஆண்டில் 578 ஆக இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 42 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல, 27 ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 1040-க்கும் மேல் உயர்ந்துள்ளது.


பன்மடங்கு உயர்ந்த மருத்துவக் கல்லூரிகள்


மருத்துவக் கல்வியின் தேவையும் தரமும் சுதந்திரத்துக்குப் பிறகு 75 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 1951-ல் 28 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள், 650-க்கும் மேல் அதிகரித்துள்ளன.


உறுதிசெய்யப்பட்ட ஆரம்பக் கல்வி


தொடக்கக் கல்வி அனைவருக்கும் கட்டாயம் கிடைக்கப்படுவதை சர்வ சிக்‌ஷ அபியான், ஆர்டிஇ எனப்படும் அனைவருக்கும் கல்வி சட்டம் ஆகிய திட்டங்கள் உறுதி செய்தன. 14 வயது வரை அனைவருக்கும் கட்டாயமாக, இலவசக் கல்வி கிடைக்க இவை வழிசெய்கின்றன.


உயர் கல்வி விரிவாக்கம்


உதவித்தொகைகள், உறுதியான செயல் கொள்கைகள் ஆகியவற்றின் மூலம் உயர் கல்வி பரவலாக விரிந்துள்ளது. நாடு முழுவதும் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதத்தை எட்ட உள்ளது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை கணிசமாக அதிகரித்துள்ளன.




அறிவியல், தொழில்நுட்பங்கள் ஊக்குவிப்பு


தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முறைகள் இந்தியாவில் ஊக்குவிக்கப்பட்டன. அன்றைய பிரதமர் நேருவின் வழிகாட்டலில் ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோர் இஸ்ரோவுக்கான விதையைப் போட்டனர். அது படிப்படியாக வளர்ந்து மங்கள்யான், சந்திரயான் 3 என விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.


நாடு முழுவதும் தலைசிறந்த கட்டமைப்பு வசதிகளோடு ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சிக்கள் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிப் பணிகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன.


புதிய கல்விக் கொள்கை அறிமுகம்


தொடர்ந்து 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளிகளில் தாய்மொழி வழிக் கல்வி, 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டது பரபரப்பைக் கிளப்பியது. மொழியியல் பன்முகத் தன்மையை மேம்படுத்துதல், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கு கல்வி வாய்ப்புகளை உறுதி செய்தல் ஆகியவற்றையும் தேசிய கல்விக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.




சவால்கள் என்ன?


மேலே குறிப்பிட்ட அனைத்து சாதனைகளும் உடனடியாக, ஒரே சீராக நடந்துவிடவில்லை. உடன் வேறு பல சவால்களும் உடன் இருந்தன. கல்வி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, தரப் பிரச்சினைகள், பாலின பேதம், பிராந்திய சமத்துவம் இல்லாமை என பல பிரச்சினைகளும் சவால்களும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் நிலவின. சொல்லப்போனால் இந்த பிரச்சினைகளில் பெரும்பாலானவை இன்னும் இருக்கின்றன.


பாடத்திட்டம் முன்னேற்றம், ஆசிரியர் பயிற்சி, டிஜிட்டல் எழுத்தறிவு, தொழிற்கல்வி உள்ளிட்ட விவகாரங்களில் இன்னுமே சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.


மாணவர்கள் மத்தியில் சமூக ஊடகங்கள், திரை ஆளுமைகள், பிரபலங்களின் தாக்கம் பெரும்பாலும் எதிர்மறையாகவே வெளிப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான முரண் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தையும் அரசு கவனிக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது.


எனினும் இந்திய அரசு, வளர்ந்த நாடு என்னும் நிலையை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.