அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்றத்தையெடுத்து, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை சோனியா காந்தி தலைவரிடம் ஒப்படைத்தார். 137 ஆண்டுகள் பழமைவாய்ந்த காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் சோனியா காந்தியின் பங்கு அளப்பரியது. இந்நிலையில், சோனியா காந்தியின் கட்சி பங்களிப்பினை குறிப்பிட்டு அவரது மகள் பிரியங்கா காந்தி நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்களை நினைத்து பெருமையடைகிறேன், அம்மா! இந்த உலகம் என்ன சொல்லும், நினைக்கும் என்பதெல்லாம் பொருட்டே இல்லை. அன்பினால்தான் நீங்கள் யாவும் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்!” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 






 


இந்த பதிவுடன் பிரியங்கா, மல்லிகார்ஜூன கார்கேயின் பதவி ஏற்பு நிகழ்வில் சோனியா காந்தி தனது கணவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் புடைப்படத்தை கையில் வைத்திருந்ததை இணைத்துள்ளார்.


நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசுகையில், “ என்னால் இயன்ற வரையில் என் கடமைகளை செய்துவிட்டேன். தற்போது நிம்மதியாக உள்ளது. என் தோள் மேல் இருந்த பாரம் இப்போது இல்லை. இது மிகப்பெரிய பொறுப்பு. இப்போது, இந்த பொறுப்பு மல்லிகார்ஜூன கார்கே அவர்களுடையது.” என்று தெரிவித்தார்.


காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி 2000 ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்தார். 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பதிவு செய்தார் சோனியா.


பொறுப்பேற்றார் கார்கே


டெல்லி மாநிலத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மல்லிகார்ஜுன கார்கே  கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை கார்கேவிடம் முறைப்படி வழங்கினார். பின்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைத்தனர்.


அடுத்த மாதம் சட்டசபை தேர்தல்


பல மாநிலங்கிளில் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றி, பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், மல்லிகார்ஜுன கார்கே தலைவர் பொறுப்பை ஏற்றார். அடுத்த மாதம் நவம்பர் 12 ஆம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அது போன்று விரைவில் குஜராத் சட்டசபை தேர்தலும் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பாஜகவை முறியடித்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வாரா என்ற எதிர்பார்ப்பு கட்சி நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது.