ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் இந்துக் கடவுள்களான லட்சுமி, விநாயகர் படங்களையும் சேர்க்குமாறு டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரூபாய் நோட்டில் இந்துக் கடவுள்கள்
இந்துக் கடவுள்களான லட்சுமி, விநாயகர் படங்களை ரூபாய் நோட்டுகளில் சேர்ப்பது நாட்டுக்கு செழிப்பைத் தரும் என்றும் , தனது வீட்டில் தீபாவளி பூஜை செய்து கொண்டிருந்தபோது தனக்கு இந்த யோசனை வந்ததாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், “நமது பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பதை அனைவராலும் காண முடிகிறது.
இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம், அதற்கு நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் தெய்வங்களின் அருள் இருக்கும்போது மட்டுமே நம் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
இந்தோனேஷிய கரன்சியில் விநாயகர்
இன்று மத்திய அரசுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நமது நாணயத்தின் ஒரு பக்கத்தில் காந்தியின் படம் உள்ளது. அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். ஆனால் மறுபுறம் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
தினமும் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. ஆகையால் இந்தப் படங்களை சேர்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு கடவுள்களும் செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "இந்தோனேசியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. 2-3 விழுக்காடு இந்துக்கள் மட்டுமே அங்கு உள்ளனர். அவர்களின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் புகைப்படம் உள்ளது. இந்தோனேசியா இதனைச் செய்யும்போது நம்மால் ஏன் அதைச் செய்ய முடியாது?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
’இந்துத்துவாவைப் பின்பற்றும் உத்தியா?’
தனது கோரிக்கையை விரைவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமாக எழுத உள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இந்துத்துவாவைப் பின்பற்றுவது ஆம் ஆத்மியின் உத்தியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ”மக்கள் எதையும் சொல்வார்கள்” என்றும் அவர் பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து வரவிருக்கும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) தேர்தல் குறித்து பேசிய கெஜ்ரிவால், டெல்லி மக்கள் பாஜகவை நிராகரிப்பார்கள் என்று தான் நம்புவதாகவும், ஆம் ஆத்மி இந்தத் தேர்தலை எதிர்கொள்ள முழுமையாக தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன் குஜராத் மாநிலம், வதோதராவில் பரப்புரை மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்பியது பெரும் கவனத்தை ஈர்த்தது.
மேலும், “நான் ஜென்மாஷ்டமி நாளில் பிறந்தேன். என்னை ஒரு நோக்கத்துக்காக கடவுள் அனுப்பி வைத்துள்ளார். கம்சரின் வழித்தோன்றல்களையும் ஊழல் செய்பவர்களையும் அழிக்க கடவுள் என்னை இங்கு அனுப்பி வைத்துள்ளார்” எனவும் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.