Chandrababu Naidu: ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். 


ஆந்திர அரசியலை உலுக்கிய கைது:


கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியது.


இந்த வழக்கில் ஆந்திர பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. ஜாமீன் கேட்டு, சந்திரபாபு நாயுடு விடுக்கும் கோரிக்கைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து வரும் நிலையில், இன்றும் அவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.


சட்ட போராடத்தில் தொடர் பின்னடைவு:


இன்றைய விசாரணையின்போது, சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, "73 வயது முதியவர் (சந்திரபாபு நாயுடு) கடந்த 40 நாட்களாக சிறையில் இருக்கிறார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வேண்டும். அவரை விடுவிப்பது குறித்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும்" என்றார். ஆனால், இதற்கு ஆந்திர பிரதேச அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "ஜாமீன் மனு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வழக்கின் பலன்களின் அடிப்படையில் அதை பரிசீலிக்க வேண்டும்" என வாதிட்டது.


சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, "தனியான கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறோம். சட்டப்பிரிவு 17ஏ கீழ் ஜாமீன் கேட்கிறோம். விசாரணை நீதிமன்றத்தில், இந்த சட்டப்பிரிவை தொடவே இல்லை. ஏன் என்றால், அது உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே பொருந்தும்" என்றார்.


ஆந்திர பிரதேச அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "இந்த வழக்குடன் சட்டப்பிரிவு 17ஏ பொருந்தாது. ஏன் என்றால், அந்த சட்டப்பிரிவு, 2018ஆம் ஆண்டுதான் கொண்டு வரப்பட்டது. சொல்லப்பட்ட குற்றங்கள் அனைத்தும் அதற்கு முன்பாகவே செய்யப்பட்டுவிட்டது. விசாரணை தொடங்கப்பட்டுவிட்டது" என வாதிட்டார்.இரு தரப்பு வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சந்திரபாபு நாயுடுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பையும் ஒத்திவைத்துவிட்டனர்.