கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கேஸ் சிலிண்டர், பெட்ரோல் கிடையாது என அவுரங்கபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசியின் வேகத்தை அதிகரிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களுக்கு பெட்ரோல், கேஸ் சிலிண்டர், ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்று நிர்வாகம் கூறியுள்ளது.கடை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சுற்றுலாத் தலங்களில் உள்ள ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
மாவட்டத்தில் தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் சுனில் சவான் கூறியுள்ளார்,
பிபி கா மக்பரா, அவுரங்காபாத், அஜந்தா, எல்லோரா மற்றும் பிடல்கோரா குகைகள் போன்ற வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிக்கொண்டு இருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் உள்ள இடங்களில் தடுப்பூசி போடும் பணிகளையும், தடுப்பூசிச் சாவடிகளை அமைக்கவும் அரசு சுகாதார நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, ஒரு டோஸ் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு நவம்பர் மாத சம்பளம் மற்றும் இதர நிதித் தடையை நிறுத்துமாறு கருவூல அலுவலருக்கு ஆட்சியர் கடிதம் எழுதி அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடனான உரையாடலின் போது, கொரோனா தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அவுரங்காபாத் நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இம்மாதிரியான அறிவிப்பு வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள அவிரங்காபாத், நந்துர்பார், புல்தானா, ஹிங்கோலி, நாந்தேட், பீட், அமராவதி மற்றும் அகோலா உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தில் பின்தங்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் நோய்த்தடுப்பு வீதம் தற்போது 55.12 சதவீதமாக உள்ளது, பிரதமரின் வேண்டுகோளுக்குப் பிறகு, நவம்பர் 30 ஆம் தேதிக்குள் 100 சதவீதமாகக் கொண்டு செல்ல நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்