அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை குஜராத் மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


ஒரு வாரத்திற்கு அபராதம் இல்லை


வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வாரம் கொண்டாடப்படும் தீபாவளி வாரத்தில் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இது மக்கள் மனதில் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டாம் என்ற மனநிலையை உருவாக்கும் என்றும், விபத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்றும் கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலளித்த சங்வி, "ஒரு வாரத்திற்கு அபராதம் நீக்கப்படுவதால், போக்குவரத்து விதிகளை மக்கள் கவனத்தில் கொள்ளாமல், மீறுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை", என்று கூறினார். யாரேனும் தவறுதலாக போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், அபராதம் கட்ட வேண்டிய கட்டாயம் இருக்காது என்றார்.



எப்போதும் விதிக்கப்படும் அபராதம்


வறண்ட மாநிலமான குஜராத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.10,000 முதல் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், வயது குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.25,000 மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.


தொடர்புடைய செய்திகள்: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை - அறிவித்த தமிழ்நாடு அரசு..


தேர்தல் காரணமா?


குஜராத்தில் சிக்னல் விளக்குகளை மீறினால் சாதாரண நாட்களில் ரூ 1000 முதல் ரூ 5000 வரை அபராதம் விதிக்கப்படும். குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தீபாவளி வாரத்தில் இந்த அபராதம் குறைப்பு அறிவிப்பு வந்துள்ளது. இதனை வைத்து பார்க்கையில், குஜராத்தின் தேர்தலை மனதில் வைத்து மக்கள் மனதில் நல்ல பெயர் எடுப்பதற்கான பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.



குஜராத் தேர்தல்


பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், பா.ஜ.க. தற்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள பா.ஜ.க.வின் கோட்டையாக உள்ளது. பிரதமர் மோடி அவர்களே 2001 முதல் 2014 வரை குஜராத்தின் முதல்வராக பதவி வகித்தார், அதன் பிறகு அவர் நாட்டின் பிரதமரானார். அதிலும், அமோக பெரும்பான்மையுடன் இரண்டு முறை வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதற்கு அடித்தளம் குஜராத் தான் என்றும் கூறுகிறார்கள். இந்த மாத தொடக்கத்தில், குஜராத் தேர்தல் தேதிகளை வெளியிடுவதை நிறுத்தி வைத்துவிட்டு இமாச்சல பிரதேசத்திற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும், குஜராத்தில் நவம்பர் அல்லது டிசம்பரில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.