தமிழ்நாட்டில் தான் ஆளுநராக இருந்த காலகட்டத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை விற்கப்பட்டதாக, தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றம்சாட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் உள்ள பல்கலைக்கழகங்களின் பணிகளில் ஆளுநர் தலையிடுவதாக பஞ்சாப் அரசு குற்றம் சாட்டியது. இதையடுத்து, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நான் 4 ஆண்டுகள் தமிழக ஆளுநராக இருந்தேன். அங்கு நிலை மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டது.
தமிழகத்தில் நான் ஆளுநராக இருந்தபோது, சட்டப்படி 27 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமித்தேன். வேலை எப்படி நடக்கிறது என்பதை அவர்கள் (பஞ்சாப் அரசு) என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாபில் யார் திறமையானவர், திறமையற்றவர் என்று கூட எனக்குத் தெரியாது. கல்வி மேம்படுவதை நான் பார்க்கிறேன்” என்று ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
துணை வேந்தர் நியமன விவகாரம் :
முன்னதாகப் பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவதாக பஞ்சாப் அரசு குற்றம் சாட்டியது. ஆளுநர் புரோகித் தற்போது பஞ்சாபில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளார். எனவே பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணி ஆளுநருக்கே உள்ளது.
சமீபத்தில், துணை வேந்தர்களின் பதவி நீட்டிப்பு தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு மூன்று முறை ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது. இதுகுறித்து புரோகித் தெரிவிக்கையில், “பல்கலைக்கழகங்களின் பணிகளில் ஆளுநர் தலையிடுவதாக பஞ்சாப் அரசு கூறுகிறது. உண்மையில் மாநில அரசு பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியாது. துணை வேந்தர்களின் பதவி நீட்டிப்புக்கு அரசு மூன்று முறை கடிதம் அனுப்பியது. நியமனத்தில் ஆளுநருக்கு பங்கு இல்லை என்றால் பதவி நீட்டிப்பு வழங்குவதில் மட்டும் அவருக்கு எப்படி பங்கு இருக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் அரசு கோரிக்கை
பஞ்சாப் நிதியமைச்சர் எச்.எஸ்.சீமா அரசின் பணிகளைத் தடுக்க வேண்டாம் என்று ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். அதில், "பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர், எங்கள் பணியை ஆளுநர் தடுக்கக் கூடாது. பாஜகவுக்காக பணியாற்றாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு ஆளுநரிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
பன்வாரிலால் புரோகித் :
கடந்த அக்டோபர் 6, 2017 முதல் செப்டம்பர் 17, 2021 வரை பன்வாரிலால் புரோகித், தமிழ்நாட்டின் 14ஆவது ஆளுநராக பணியாற்றினார். இவர் ஆளுநராக இருந்தபோது அருப்புகோட்டை தனியார் கல்லூரி துணைப் பேராசிரியை நிர்மலா தேவி வழக்குகள் உள்பட பல சர்ச்சைகளில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.