Fastag: அநாவசியமான கால தாமதத்தை தடுக்கும் நோக்கில் இரட்டை கட்டணம் வசூலிப்பதாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.


ஃபாஸ்டேக் - இரட்டை கட்டணம்:


தேசிய நெடுஞ்சாலையில் பயன்படுத்துவோர் மத்தியில், மின்னணு கட்டண வசூல் அமைப்பான FASTag ஐப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஃபாஸ்டேக்  ஸ்டிக்கர் இல்லாத மற்றும் காரின் விண்ட்ஷீல் கண்ணாடியில் முறையாக ஒட்டாத நபர்களிடமிருந்து இருமடங்கு கட்டணத்தை வசூலிக்குமாறு சுங்கச்சாவடி ஆபரேட்டர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


தாமதத்தை தடுக்க நடவடிக்கை:


ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் டோல் பிளாசாக்களில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே,  இருமடங்காக கட்டணம் வசூலிப்பது சுங்கச்சாவடி செயல்பாடுகளை திறம்பட செய்ய உதவும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOPs) அனைத்து சுங்க வசூல் முகவர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல் சுங்கச்சாவடிகளில் முக்கியமாகக் காட்டப்பட வேண்டும். கூடுதலாக, சுங்கச்சாவடிகளில் உள்ள சிசிடிவிகளில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களின் பதிவு எண்கள் பதிவு செய்யப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஃபாஸ்டேக் வழங்கும் வங்கிகள் விற்பனை செய்யும் இடத்தில் கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


சுங்க வசூல்:


தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008 இன் கீழ் NHAI தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, ​​1,000 அல்லது அதற்கு மேற்பட்ட பிளாசாக்கள் இந்தியா முழுவதும் சுமார் 45,000 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளுக்கு சுங்கவரி வசூலிக்கின்றன. எட்டு கோடிக்கும் அதிகமான பயனர்கள் மற்றும் சுமார் 98 சதவ்கித பயனாளர்கள் வீததுடன், FASTag ஆனது இந்தியாவில் சுங்கவரி வசூலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம்:


மத்திய அரசு விரைவில் ஐந்து முதல் 10 நெடுஞ்சாலைகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் சோதனையை தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகமான மற்றும் திறமையான GPS டோலிங், தற்போதுள்ள FASTag-அடிப்படையிலான டோலிங் முறையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அமைப்பு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் சோதனை நடத்தப்படும் என்று சாலைகள் அமைச்சகத்தின் செயலாளர் அனுராக் ஜெயின் தெரிவித்தார். புதிய முறையின் கீழ், பயணத்தின்போது கட்டணம் வசூலிக்கப்படும், பிரத்யேக சுங்கச்சாவடிகளின் தேவை முடிவுக்கு வரும். 


கட்டணம் வசூலிப்பது எப்படி?



ஜிபிஎஸ் அடிப்படையிலான டோலிங்கின் கீழ், வாகனங்களில் அவற்றின் இயக்கத்தைக் கண்காணிக்கும் சாதனம் பொருத்தப்பட வேண்டும். நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் இடத்தில் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படும். குறைந்த தூரத்திற்குப் பிறகு வாகனம் வெளியேற வேண்டியிருந்தாலும், சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டிய தற்போதைய முறையைப் போலல்லாமல், பயணித்த தூரம் குறைவாக இருந்தால், குறைந்த கட்டணத்தை பயணிகள் செலுத்த இது அனுமதிக்கும்.




புதிய அமைப்பு சென்சார்களை அடிப்படையாகக் கொண்டது, எனவே பயணிகள் டோல் பிளாசாக்களில் நின்று கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த அமைப்பின் கீழ், நெடுஞ்சாலைப் பயனர்கள் தங்களையும் தங்கள் வாகனங்களையும் பதிவு செய்து, சுங்கக் கட்டணத்தை மாற்ற வங்கிக் கணக்குகளை இணைக்க வேண்டும்.