மனைவிக்கு எச்ஐவி என்று பொய் சொல்லி விவாகரத்து கோரிய கணவருக்கு விவாகரத்து வழங்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.


புனேவைச் சேர்ந்த 44 வயது நபர் தன் மனைவிக்கு எச்ஐவி இருப்பதாகக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். இதனை புனே குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், மனைவிக்கு எச்ஐவி இருப்பதாக அவர் கூறியதை நிரூபிக்க மறுத்ததால் அவருக்கு விவாகரத்து மறுக்கப்பட்டுள்ளது.


இந்த நபருக்கு 2003ல் திருமணமானது. ஆனால் திருமணம் ஆன நாளில் இருந்தே அந்த நபர் தனது மனைவி மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும் கூறிவந்தார். இருவருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் மனைவிக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 2005-ல் அவருக்கு எச்ஐவி ஏற்பட்டிருப்பதாக அவரது கணவர் கூறலானார். இந்நிலையில் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரிக்க கணவர் குடும்பநல நீதிமன்றத்தை நாடினார். அங்கு விவகாரத்து மனு நிராகரிக்கப்பட மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் மனைவிக்கு எய்ட்ஸ் பாதித்திருப்பதாக அவர் கூறியதற்கு ஆதாரமில்லை. அதனால் அந்த முகாந்திரத்தில் அவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.


வீட்டுவேலை பார்க்க விரும்பாவிட்டால் திருமணத்துக்கு முன்னரே பெண்கள் சொல்லிவிட வேண்டும். அப்படிச் சொன்னால் அந்த திருமணம் வேண்டுமா என்பதை மணமகன் வீட்டார் பரிசீலிக்க ஏதுவாக இருக்கும். ஒருவேளை திருமணத்திற்குப் பின்னர் வீட்டுவேலை பார்க்க விரும்பாவிட்டால் வீட்டாருடன் பேசித் தீர்வு காணலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கியது கவனம் பெற்றது.


பெண்களுக்காக குரல் கொடுத்த மும்பை கோர்ட்:


பெண்களை "ஐட்டம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்தால் அதுவும் பாலியல் துன்புறுத்தல்தான் என்று மும்பை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. சிறுமியை "ஐட்டம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. "இந்த வார்த்தை ஆண்களால் பெண்களை இழிவான முறையில் பேச பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது பாலியல் ரீதியாக அவர்களைப் புறக்கணிக்கிறது" என்று சிறப்பு நீதிபதி எஸ்.ஜே.அன்சாரி தனது தீர்ப்பில் கூறினார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ் அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றவாளி மீது குற்றம் சாட்டப்பட்டது. “இதுபோன்ற குற்றங்களை கடுமையாகக் கையாள வேண்டும். ஏனெனில் இதுபோன்ற ரோமியோக்களுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும். பெண்களின் மரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சில குறிப்பிட்ட வார்த்தைகளால் அழைக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.