மணிப்பூர் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடியை பதில் அளிக்க வைப்பதற்காக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அதன் மீதான விவாதம் இன்று தொடங்கியுள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்த வைத்ததால், இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என தகவல் வெளியானது.


"இரண்டு மணிப்பூரை உருவாக்கியுள்ள மத்திய அரசு"


ஆனால், கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் மக்களவைக் குழு துணை தலைவர் கவுரவ் கோகோய் விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசிய அவர், "மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌன விரதத்தை முடிவுக்கு கொண்டு வரவே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவுக்கு ஏற்பட்டது.


ஒரே இந்தியாவை உருவாக்க வேண்டும் என பேசி வரும் அரசு, இரண்டு மணிப்பூரை உருவாக்கியுள்ளது. ஒன்று மலைகளில் உள்ளது. மற்றொன்று பள்ளத்தாக்கில் உள்ளது" என்றார்.


"பிரதமர் மோடியின் மௌனத்திற்கு இதுதான் காரணம்"


கடும் அமளிக்கு மத்தியில் தொடர்ந்து பேசிய கவுரவ் கோகோய், "மணிப்பூருக்கு நீதி வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் நிலவும் அநீதி அனைத்து இடங்களிலும் நீதிக்கான அச்சுறுத்தலாக மாறும் என்கிறார் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். மணிப்பூர் எரிந்தால் இந்தியா முழுவதும் எரியும். மணிப்பூர் பிரிந்தால் நாடே பிளவுபடும்.


நாட்டின் தலைவர் என்ற முறையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் குறித்து பேச வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக இருக்கிறது. இருப்பினும், அவர் மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி பேசமாட்டேன் என்று மௌன விரதம் கடைப்பிடிக்கிறார்.


பிரதமர் மோடி மௌனமாக இருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று மாநில அரசின் தோல்வி. இரண்டாவது, உள்துறையின் தோல்வி. மூன்றாவது தேசிய பாதுகாப்பில் ஏற்பட்ட தோல்வி. எனவே, தான் தவறு செய்ததை ஏற்க மறுக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறையில் மணிப்பூர் தொடர்பாக பிரதமர் மோடி என்ன பேசினார் என்பதை சபையில் தெரிவிக்க வேண்டும்" என கேள்வி எழுப்பினார்.


இதை கடுமையாக சாடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பிரதமர் மோடி தொடர்பாக ஆதாரமில்லாத தகவல்களை உறுப்பினர் தெரிவிக்கக் கூடாது" என்றார்.


இதற்கு மத்தியில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசவிருந்த ராகுல் காந்தி, கடைசி நிமிடத்தில் ஏன் பின்வாங்கினார்" என கேள்வி எழுப்பினார்.


நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசின் சார்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் பேச உள்ளனர்.