நெய்வேலியில் என்.எல்.சியின் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தும் திட்டம் இல்லை என, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


”நெற்பயிர்கள்  அறுவடைக்கு தயாராக இருந்த நிலங்களில் இயந்திரங்களை இறக்கி, என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டதை,  அவ்வளவு எளிதாக தமிழக மக்கள் யாரும் மறந்து இருக்க மட்டார்கள். நீதிமன்றமும் கூட கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தும் திட்டம் இல்லை எனவும், கூடுதல் நிலம் தேவைப்படுவதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.”


அன்புமணி ராமதாஸ் கேள்வி:


”பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான லட்சிய இலக்கைக் கருத்தில் கொண்டு, நெய்வேலியில் உள்ள இரண்டாவது சுரங்கத்தை விரிவாக்கம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறுமா என” மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். 


மத்திய அரசு திட்டவட்டம்:


அன்புமணியின் கேள்விக்கு நிலக்கரி மற்றும் சுரங்க மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், நெய்வேலியில் உள்ள இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்த திரும்பப் பெறும் திட்டம் இல்லை. இரண்டாவது சுரங்கம் உள்ளிட்ட அனைத்து சுரங்கங்களும், உற்பத்தி நிலையங்களும் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து தென் மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கும் நோக்கில் செயல்படுகின்றன. எனவே, நெய்வேலியில் தற்போதுள்ள சுரங்கங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்கள் தொடர்ந்து இயங்கும்” என விளக்கமளித்துள்ளார்.


சி.வி. சண்முகம் கேள்வி 


இதனிடையே,  நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இன்னும் சில சுரங்க நடவடிக்கைகளுக்காக அருகிலுள்ள பகுதிகளை கையகப்படுத்துகிறது என்பது உண்மையா?  என அதிமுக உறுப்பினர் சி. வி. சண்முகம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.


”2,600 ஏக்கர் தேவை”


சி.வி. சண்முகத்தின் கேள்விக்கும் நிலக்கரி மற்றும் சுரங்க மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் ”சுரங்க விரிவாக்க பணிகளுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 1054 ஹெக்டேர் அதாவது 2604.4 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தொடர்ச்சியான மின்சார உற்பத்திக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.  இது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும். நில கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால், சுரங்க விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முழு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மாற்றப்பட்ட பலன்களை பெற்றுக்கொள்ளவும் நில உரிமையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து வருகின்றனர்.  விவசாய நிலத்திற்காக நாட்டிலேயே அதிக இழப்பீடு வழங்கும் நிறுவனம் என்.எல்.சி தான். சுரங்க விரிவாக்க பணிகளுக்காக யாரேனும் ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை இழந்தால், அவருக்கு ரூ.75 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது” என அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.


அடுத்து என்ன?


என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகள் திரும்பப் பெறப்படாது, கூடுதல் நிலங்கள் கைப்பற்றப்படும் என மத்திய அரசு திட்டடமாக தெரிவித்து இருப்பது விவசாயிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடியே பலருக்கு அரசு வேலைவாய்ப்பையோ உரிய இழப்பீடையோ வழங்கவில்லை என நிலம் வழங்கியவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


விவசாயம் பாதிப்பு:


ஏற்கனவே முப்போகும் விளையும் நிலங்களை கையக்கப்படுத்தி தான், நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்.எல்.சி நிர்வாகம் செய்து வருகிறது. அண்மையில் கூட நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்த நிலங்களில் இயந்திரங்களை இறக்கி பணிகள் முன்னெடுத்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனங்கள் குவிந்தன.  இந்த செயலை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்றம் நிலத்தை தோண்டி, நிலக்கரி, மீத்தேன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் விவசாயத்தில் ஏற்படும் வெற்றிடத்தை எப்படி தான் நிரப்புவது. அரிசி மற்றும் காய்கறிக்காக அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்க தான் போகிறோம் எனவும் எச்சரித்தது.   இந்நிலையில் விரிவாக்கத்திற்காக புதியதாக கையகப்படுத்தும் நிலங்களும் விவசாய மற்றும் குடியிருப்பு பகுதிகளாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நெய்வேலி சுற்றுவட்டார பகுதியில் இனி விவசாயம் என்பதே அரிதான தொழிலாக மாற வாய்ப்புள்ளது. 


போராட்டங்கள் தொடருமா?


கடந்த பல ஆண்டுகளாகவே என்.எல்.சிக்கு எதிராக விவசாய அமைப்புகள் மற்றும் பாமக கடுமையாக போராடி வருகின்றன. விளைநிலங்களை பறித்துக்கொண்டு உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அகதிகளாக மாற்றுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. விவசாயம் சீரழிக்கப்பட்டு அப்பகுதியே பாலைவனமாக மாற்றப்படுவதாகவும், முப்போகும் விளையும் நிலங்களை அழித்து சுரங்க பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் விரிவாக்க பணிகள் தொடரும் என மத்திய அரசு கூறி இருப்பதால், பாமக மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.