சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் உருவான முதல் மத்திய அமைச்சரவை தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


முதல் மத்திய அமைச்சரவை:


ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டி இருந்தது. ஆனால், அந்த காலகட்டத்தில் உடனடியாக தேர்தல் நடத்துவது என்பதும் சாத்தியமற்றதாக இருந்தது. இதன் காரணமாக தான், அரசியல் நிர்ணய சபையில் இருந்து பிரதமர் உள்ளிட்டோர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர்.


அரசியல் நிர்ணய சபை என்றால் என்ன?


இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இந்தியாவின் அரசியலமைப்பினை தொகுக்கவும், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நாடாளுமன்றமாக பணியாற்றவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு 15 பெண்கள் உட்பட 389 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் இருந்து தான் ஜவஹர் லால் நேரு நாட்டின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்பு, அரசியலமைப்பு நிர்ணய சபையில் இருந்த 15 பேரை தனது அமைச்சரவை சகாக்களாக நேரு தேர்ந்தெடுத்தார்.


சமத்துவமான அமைச்சரவை:


நாட்டின் முதல் மத்திய அமைச்சரவையில் இந்து, இஸ்லாம், கிறித்துவம், சீக்கீயர் மற்றும் பார்சி என பல்வேறு சமூகத்தை சேர்ந்த நபர்களும் இடம்பெற்றனர். தலித் சமூகத்தை சேர்ந்த இருவருக்கும் நாட்டின் முதல் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டது. ராஜ்குமாரி அம்ரித் கவுர் நாட்டின் முதல் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். இதில் 3 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சரவையானது 1952ம்  ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதல் தேர்தலில் வெற்றி பெற்று, நேரு இரண்டாவது முறையாக பொறுப்பேற்கும் வரை நீடித்தது.


பிரதமர் & துணை பிரதமர்:


நாட்டின் முதல் பிரதமரான நேரு வெளியுறவுத்துறை, காமன்வெல்த் நாடுகள் உடனான உறவு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான துறைகளை தன் வசம் வைத்து இருந்தார். துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்ற சர்தார் வல்லபாய் படேல் 1950ம் ஆண்டு தான் இறக்கும் வரை அந்த பதவியை வகித்து வந்தார். அவரை தொடர்ந்து ராஜ கோபாலாச்சாரி, கைலாஷ் நாத் கட்ஜு ஆகியோரும் இந்த பதவியை வகித்தனர். இதனிடயே, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராகவும் வல்லபாய் படேல் 2 ஆண்டுகள் பதவி வகித்தார். அவரை தொடர்ந்து, திவாகர் அந்த பதவியை வகித்தார். 


நிதித்துறை: நாட்டின் முதல் நிதியமைச்சராக ஷண்முகம் செட்டி பொறுப்பேற்றார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பதவி விலகிய பிறகு நேருவின் இரண்டாவது அமைச்சரவை பதவி ஏற்கும் வரை, ஜான் மத்தாய் மற்றும் சி.டி. தேஷ்முக் ஆகியோர் நாட்டின் நிதியமைச்சர் பதவியை வகித்தனர்.


சட்ட அமைச்சர்: நாட்டின் முதல் சட்ட அமைச்சராக அம்பேத்கர் பொறுப்பேற்று, 1951ம் ஆண்டு வரை அந்த பதவியை வகித்து வந்தார்.


பாதுகாப்பு அமைச்சர்: 1947ம் ஆண்டு தொடங்கி நேருவின் இரண்டாவது அமைச்சரவை பொறுப்பேற்கும் வரை பல்தேவ் சிங் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக நீடித்தார்.


ரயில்வே & போக்குவரத்து அமைச்சர்: நாட்டின் முதல் ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்ற ஜான் மத்தாய், ஒரே ஆண்டில் இலாக்கா மாற்றப்பட்டார். அவரை தொடர்ந்து பதவியேற்ற கோபாலசுவாமி அய்யங்கார், நேருவின் இரண்டாவது அமைச்சரவை பொறுப்பேற்கும் வரை அமைச்சராக செயல்பட்டார்.


கல்வி அமைச்சர்: 1947ம் ஆண்டு தொடங்கி நேருவின் இரண்டாவது அமைச்சரவை பொறுப்பேற்கும் வரை மவுலானா அப்துல் கலாம் ஆசாத் கல்வி அமைச்சராக நீடித்தார்.


உணவு & வேளாண் அமைச்சர்: நாட்டின் உணவு மற்றும் வேளாண் அமைச்சராக பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத் ஒரே ஆண்டில் பதவி விலகினார். பின்பு, ஜெய்ராம்தாஸ் தவுலத்ராம் அந்த பதவியை வகித்தார்.


தொழில் & வழங்கல் துறை: தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராக ஷ்யாம பிரசாத் முகர்ஜி 1950ம் ஆண்டு வரைய்ல் செயல்பட்டார்.


தொழிலாளர் நல அமைச்சர்: ஜெக்ஜீவன் ராம் நாட்டின் முதல் தொழிலாளர் நல அமைச்சராக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்தார்.


வணிக அமைச்சராக கூவர்ஜி ஹோர்முஸ்ஜி பாபா, தகவல் தொடர்பு அமைச்சராக ரஃபி அகமது கித்வாய், சுகாதார அமைச்சராக  அம்ரித் கவுர் மற்றும் மின்துறை அமைச்சராக நர்ஹர் விஷ்ணு காட்கில் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்தனர்.


நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சராக கேசி நியோகி 3 ஆண்டுகள் செயல்பட்டார். இதனிடையே, மோகன்லால் சக்‌ஷேனா 5 ஆண்டுகள் இலாக இல்லாத அமைச்சராக நீடித்தார்.