பதவி நீக்க ரத்துக்குப்பின் முதல்முறையாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். 


நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெறுகிறது. இதில் பதவி நீக்க ரத்துக்குப்பின் முதல்முறையாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேசினார். 


அப்போது பேசிய ராகுல்காந்தி “அதானி பற்றி பேசமாட்டேன். பாஜகவினர் அச்சப்பட வேண்டாம்” என்றார். 


மேலும், “மணிப்பூர் பற்றியே பேசுவேன். நான் இன்று யாரையும் அதிகமாக தாக்கி பேசப்போவதில்லை. நான் 130 நாட்கள் ஒற்றுமை இந்தியா யாத்திரையை மேற்கொண்டேன். யாத்திரை சென்றபோது என்ன லட்சியத்திற்காக யாத்திரை மேற்கொள்கிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்டார்கள். குமரியில் யாத்திரியை தொடங்கியபோது நாட்டை புரிந்து கொள்வதற்காகவே தொடங்கினேன். இதற்கு முன் நான் பேசிய பேச்சு பாஜகவினருக்கு காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எம்.பி தகுதி நீக்கத்தை ரத்து செய்த சபாநாயகருக்கு நன்றி” என்றார். 


தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி “இந்த பயணத்தில் மக்களை பற்றி தெரிந்து கொள்ள பயணித்தேன். இதில் மக்களின் அன்பு வெளிப்பட்டது. இதற்காக நான் இறக்கவும் தயாராக உள்ளேன். இதற்காக பிரதமர் மோடி விரும்பினால் சிறை செல்ல கூட தயாராக உள்ளேன். 


இந்த பயணத்தில் 8 வயது சிறுமி எழுதிய கடிதத்தில், ‘ராகுல் நான்  உங்களுடன் பயணிக்கிறேன்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது மனதில் தோன்றிய ஒரே எண்ணம், இந்த பயணத்தை மேற்கொள்ள போதிய சக்தியை எனக்கு கொடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். லட்சக்கணக்கான மக்கள் இந்த பயணத்தில் எண்ணுடன் இருந்தனர். தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரும் உடன் இருந்தனர். விவசாயிகளிடையே பேசும் போது அவர்களின் பயம், பசி எனக்குள் வந்தது.


 நான் சில தினங்களுக்கு முன் மணிப்பூர் சென்று இருந்தேன். ஆனால் இன்று வரை நாட்டின் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூரின் நிலை இன்று வரை சரி செய்யப்படவில்லை. மணிப்பூரை இரண்டாக பிளந்துள்ளனர். சுக்குநூறாக உடைத்துவிட்டனர். மணிப்பூரில் இருக்கும் நிவாரண முகாமிற்கு நான் சென்ற போது, அங்கு இருக்கும் பெண்களை, குழந்தைகளை சந்தித்து பேசினேன். அதனை இன்றுவரை பிரதமர் செய்யவில்லை. அதில் ஒரு பெண், தன் குழந்தையை தனது கண்முன்னே சுட்டுக்கொன்றதாக கூறினார். அவர் அனைத்தையும் இழந்து நிர்கதியாக நின்றார்.  இந்தியா அனைவருக்குமான வீடு, இந்தியா மக்கள் குரலை பிரதிபளிக்கும் நாடாக உள்ளது, ஆனால் அது தற்போது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது” என பேசினார். 


என் ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறாள். மற்றொரு தாயை நீங்கள் மணிப்பூரில் இழந்து இருக்கிறீர்கள். இந்தியா என்ற சித்தாந்தத்தை அரசு கொண்டு இருப்பது மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்தது. அரசின் அகங்காரத்தால் ஹரியானா மணிப்பூர் போன்ற மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் அரசு கேட்கவில்லை” என்று ஆவேசமாக பேசினார் ராகுல்காந்தி.