டெல்லி மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


சிசோடியாவுக்கு பிணை வழங்க எதிர்ப்பு:


மணீஷ் சிசோடியாவுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தரப்பு, "விசாரணை முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. தேசிய தலைநகருக்கான புதிய மதுபானக் கொள்கையை பொதுமக்கள் அங்கீகரித்திருப்பதைக் காட்டுவதற்காக போலியான மின்னஞ்சல்களை சிசோடியா உருவாக்கினார்" என வாதம் முன்வைத்தது.


சிபிஐ விசாரித்து வரும் ஊழல் வழக்கில் சிசோடியாவின் ஜாமீன் மனு கடந்த மார்ச் 31ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அன்றைய விசாரணையில், மதுபான நிறுவனங்களிடம் இருந்து 90 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறுவதற்காக சதியை தீட்டியவர்களில் முக்கியமானவர் சிசோடியா என்பதற்கு முகாந்திரம் உள்ளது என சிபிஐ தரப்பு வாதிட்டது.


இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம், "சிசோடியாவின் விடுதலையானது நடந்து வரும் விசாரணையை எதிர்மறையாக பாதிக்கும்" என தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.


ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. 


அரசியல் அழுத்தம்:


தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்தது. இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். சிசோடியாவைத் தவிர அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.


டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் பெயர் சமீபத்தில் சேர்க்கப்பட்டது.


தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புட்சி பாபு, அர்ஜுன் பாண்டே மற்றும் அமந்தீப் தால் ஆகியோரின் பெயர்கள் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது.


கடந்த வாரம், இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சாட்சியாக 9 மணி நேரம் சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளும் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவருமான கவிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.