துபாயில் வசிக்கும் இந்திய கோடீஸ்வரர் பி.ரவி பிள்ளை என்பவர்தான், 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஏர்பஸ் ஹெலிகாப்டர் வைத்திருக்கும் முதல் இந்தியர் ஆகியுள்ளார். நாட்டில் அம்பானி, அதானி, டாடா போன்ற பணக்காரர்கள் பலரே வாங்காத இந்த ஹெலிகாப்டரை கேரளாவை சேர்ந்த ஒருவர் வாங்கியிருப்பது பலரை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.


இந்தியாவின் முதல் ஏர்பஸ் ஹெலிகாப்டர்


கேரளாவில் உள்ள கொல்லத்தை சேர்ந்த 68 வயதாகும் ரவி பிள்ளை என்பவர்தான் இந்த விலையுயர்ந்த ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். இவரது தந்தை ஒரு விவசாயி என்றும், அவர் வளர்ந்து வரும் போது நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. RP குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிப்பிள்ளை, ஜூன் 2022 இல் ஏர்பஸ் H145 ஹெலிகாப்டரை ரூ. 100 கோடிக்கு வாங்கிய பிறகு அனைவராலும் பேசப்படும் நபராகியுள்ளர். இந்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் மற்றும் ஏழு பயணிகள் அமர முடியும் என்று கூறப்படுகின்றது. 



பிரபலத்தை விரும்பாதவர்


இந்த அதிநவீன ஹெலிகாப்டர், கடல் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் இருந்து தரையிறங்கும் திறன் கொண்டது. ஹெலிகாப்டரில் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும், ஆற்றல் உறிஞ்சும் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ரவிப்பிள்ளை பெரிதாக வெளியில் தெரிய விரும்பாத நபர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தொண்டு பணிகளுக்காக மட்டும் ஒருசிலர் மத்தியில் அறியப்படுகிறார்.


தொடர்புடைய செய்திகள்: Vijay Kutty Story Round up: விஜய்யின் குட்டி ஸ்டோரீஸ் ஞாபகம் இருக்கா... இதோ குட்டி கதைகளின் ரவுண்டு அப்!


ரவிப்பிள்ளையின் வளர்ச்சி


செப்டம்பர் 2, 1953 இல் பிறந்த ரவிப்பிள்ளை கொச்சி பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். ரவிப்பிள்ளை ஒருமுறை ஒரு நபரிடம் தனது சொந்தத் தொழிலைத் தொடங்க ரூ. 1 லட்சம் கடன் வாங்கி, தனது நிறுவனம் பணம் சம்பாதித்த பிறகு பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். ரவிப்பிள்ளை லாபத்தைச் சேமித்து, பின்னர் தனது கட்டுமானத் தொழிலைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



ரவிப்பிள்ளையின் கட்டுமான தொழில்


1978-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்குச் சென்ற ரவிப்பிள்ளை, எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாட்டில் கட்டுமானத் தொழிலைத் தொடங்கினார். அவர் தனது கட்டுமான நிறுவனத்திற்கு நாசர் எஸ். அல் ஹஜ்ரி கார்ப்பரேஷன் (NSH) என்று பெயரிட்டார். அவர் தனது மகள் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தியபோது ஏற்கனவே செய்திகளில் பிரபலம் ஆகி இருந்தார். அந்த திருமணத்திற்கு பல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட 42 நாடுகளைச் சேர்ந்த 30,000 விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த திருமணத்தில் மத்திய கிழக்கு அரச குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ரவிப்பிள்ளைக்கு 2010 இல் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ மற்றும் 2008 இல் பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது. அவர் நியூயார்க்கில் உள்ள எக்செல்சியர் கல்லூரியில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.