தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக ஏராளமான ரசிகர்களை உலகளவில் கொண்டவர் நடிகர் விஜய். வரும் ஜூன் 22ம் தேதி இளைய தளபதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக விஜய் கூறிய குட்டி ஸ்டோரி ஒரு பார்வை. 


 



சமீப காலமாக நடிகர் விஜய் தனது படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது ரசிகர்களுக்கு கொடுக்கும் ஸ்பீச் மற்றும் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் கொடுக்கும் பாசிட்டிவான அட்வைஸ் அவரின் ரசிகர்களுக்கு மிகவும் உத்வேகமாக இருக்கும். அது பெரிய அளவில் பகிரப்பட்டு வைரலாகும். முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, ரஜினி உள்ளிட்ட  திரைபிரபலங்கள் பெரும்பாலும் மேடைகளில் பேசும் போது ஒரு கதையை சொல்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து வரும் நடிகர் விஜய் தனது 'புலி' படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் இருந்து ஒரு கதை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 


புலி:


புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசுகையில் "ஒரு மனிதனுடைய வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் அல்லது ஒரு பெண் இருப்பாங்க என சொல்வார்கள். ஆனால் என்னுடைய வெற்றிக்கு பிறகு அவமானங்கள் தான் இருந்தன. உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரான  பில்கேட்ஸ் சிறு வயதில் அவரை அனைவரும் குறை சொல்லி கொண்டே இருப்பார்களாம். மற்றவர்கள் சொல்லும் குறைகளை கேட்டு அதை சரி செய்து கொள்வாராம் பில் கேட்ஸ். பின்னர் அவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார். ஆனால் அவரை குறை கூறியவர்கள்  அவரின் நிறுவனத்தில் அவருக்கு கீழ் பணிபுரிந்தார்களாம். அதனால் நமக்கு தான் எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்காதீர்கள். மற்றவர்கள் தான் நமக்கு எல்லாமே கற்றுக்கொடுத்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்றார்.   


தெறி:


தெறி படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் படித்த ஒரு கதை பற்றி பேசியிருந்தார்.' முன்னாள் சீன அதிபர் மாவோ ஒரு முறை ரோட்டில் சென்று கொண்டு இருக்கும் போது ஒரு சின்ன பையன் தலைவர்களின் புகைப்படங்களை விற்றுக்கொண்டு இருப்பதை பார்த்தார். அருகில் சென்று பார்த்த போது தான் தெரிந்தது அத்தனையுமே அவரின் புகைப்படங்களாகவே தெரிந்தது. கொஞ்சம் கர்வம் இருந்தாலும் அந்த பையனிடம் சென்று என்ன தான் உனக்கு என் மேல பாசம், மரியாதை இருந்தாலும் நீ என்னுடைய புகைப்படங்களை மட்டும் விற்பது தப்பு. மற்ற தலைவர்களின் புகைப்படங்களையும் சேர்த்து விற்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார். அதற்கு அந்த பையன் அந்த புகைப்படங்கள் எல்லாம் எப்போதோ விற்று தீர்ந்து விட்டன. இது மட்டும் தான் விற்காமல் இருக்கிறது என பதில் அளித்துள்ளான். எனவே நாம் கர்வப்படாமல் வாழ்க்கையில் பல உயரங்களை தொட வேண்டும் என்றார். 


 



மெர்சல்:


மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில் " இதய மருத்துவ நிபுணர் ஒருவர் தனது காரை மெக்கானிக் ஒருவரிடம் கொண்டு சென்றார். அதை சரிபார்த்த மெக்கானிக் மருத்துவரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது மெக்கானிக் மருத்துவரிடம் கேட்டார் உங்களை போலவே நானும் வால்வுகளை மாற்றுகிறேன், அடைப்புகளை சரி செய்கிறேன், ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுகிறேன் இப்படி நீங்கள் செய்யும் அனைத்தையும் நானும் செய்கிறேன் ஆனால் உங்களுக்கு கிடைக்கும் மரியாதை, புகழ், பணம் எதுவும் எனக்கு கிடைப்பதில்லையே ஏன் என கேட்டார். அதற்கு மருத்துவர் மிகவும் தன்மையாக இதையெல்லாம் நீங்கள் வண்டி ஓடிக்கொண்டு இருக்கும் போது செய்து பாருங்கள் புரியும் என பதில் அளித்துள்ளார். எவ்வளவு பெரிய விஷயத்தை அவர் எவ்வளவு அழகாக எளிதாக தெளிவுபடுத்தியுள்ளார் என்றார். 


சர்கார்:


சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசுகையில் " ஒரு மன்னர் தனது பரிவாரத்துடன் வேறு ஒரு ஊருக்கு சென்றார். அப்போது வழியில் அவர் தனக்கு எலுமிச்சை ஜூஸ் வேண்டும் என கேட்க அதை செய்து கொடுக்கிறார்கள். அப்போது மன்னர் அதில் கொஞ்சம் உப்பு கலந்து கொடுக்கவும் என கேட்டுள்ளார். அதற்கு அருகில் இருக்கும் கடையில் இருந்து கொஞ்சம் உப்பு எடுத்து வரவும் என ஒருவர்  சொல்லியுள்ளார். அதற்கு மன்னர் உப்பை கொஞ்சமாக இருந்தாலும் காசு கொடுத்து வாங்கி வரவும் என சொல்ல உடனே அருகில் இருந்தவர் கொஞ்சம் உப்பில் என்ன ஆகப்போகிறது என கேட்டுள்ளார். அதற்கு மன்னர் நான் இன்று கொஞ்சம் உப்பை காசு கொடுக்காமல் எடுத்துக் கொண்டால் மன்னரே காசு கொடுக்கவில்லை நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும் என எனக்கு பின்னால் வரும் பரிவாரம் மொத்த ஊரையும் கொள்ளை அடித்து விடும் என சொல்லியுள்ளார். அது தான் மன்னர்களின் ஆட்சி என்ற கதையை கூறினார் விஜய். 


பிகில்:


பிகில் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இதுதான். பூக்கடையில் வேலை செய்யும் ஒரு பையனுக்கு திடீரென வேலை போய் விடுகிறது. அந்த பையனுக்கு வேண்டியபட்டவர் ஒருவர் பட்டாசு கடையில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். ஒரு பட்டாசு கூட விற்கவில்லை. என்ன என வந்து பார்த்தால் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அந்த பையன் வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து பூக்கள் மீது தெளிப்பது போல பட்டாசு மீது தெளித்துள்ளான். அவனை சொல்லி குற்றமில்லை. என் என்றால் அவன் தொழில் பக்தி அந்த மாதிரி. அதனால் யார் யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த வேலையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார்.  


 



மாஸ்டர்:


மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் மேடையில் பேசுகையில் 'என்னுடைய எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக் கொண்டிரு…' பாடலில் வரும் வரிகள் போல தான் நமது அனைவரின் வாழ்க்கையும். ஒரு நதி புறப்படும் போது பலரும் அதை விளக்கேற்றி வணங்குவார்கள், சிலர் பூ தூவி வரவேற்பார்கள், பிடிக்காத சிலர் கல் எறிவார்கள். இப்படி யார் எது செய்தாலும் நதி தனது வழியில் போய் கொண்டே இருக்கும். நாமும் நதியை போலவே யார் என்ன செய்தாலும் நம்முடைய வேலையை பார்த்துக்கொண்டு போயிட்டே இருக்கணும் என்றார். 


வாரிசு:


விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான  'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசிய குட்டி ஸ்டோரிக்கு அமோகமான ஆர்வம் இருந்தது. அதற்கு காரணம் அவர் இரண்டு ஆண்டு காலத்திற்கு பிறகு மாஸ்டர் படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் அவர் பேசிய குட்டி ஸ்டோரி தாறுமாறாக வைரலானது. 


1990 காலகட்டத்தில் தனக்கு ஒரு போட்டியாளர் இருந்துள்ளார். அவர் என்றுமே விஜய்யை பின் தொடர்ந்து வந்துள்ளார். அவரை எப்படியாவது முந்தி விட வேண்டும் என நானும் வேகமாக ஓடினேன். நம் வாழ்க்கையில் எப்போதுமே ஒரு போட்டியாளர் இருக்க வேண்டும். அப்போது தான் நான் ஓட வேண்டும் என்ற உத்வேகம் வரும். என்னுடைய அந்த போட்டியாளர் தான் ஜோசப் விஜய். உங்களுக்கு நீங்க தான் போட்டியாளர். உங்களை நீங்கள் வெல்ல எப்போதும் முயற்சி செய்யுங்கள் என்றார். 


இப்படி விஜய் குட்டி ஸ்டோரி மூலம் அவரின் ரசிகர்களுக்கு பல பாசிட்டிவான விஷயங்களை கதையாக சொல்லி வருகிறார். அது அவர்கள் மத்தியில் நாள் வரவேற்பையும் பெற்றுள்ளது.