கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்ததிலிருந்தே, இருவரும் பரஸ்பரம் விமரிசித்து கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால், இது தற்போது உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த கூட்டணி முறியும் தருவாயில் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டியவற்றை கீழே காண்போம்
கட்சி மீது முதலமைச்சரின் பிடியைக் குறைக்க பாஜக முயற்சிப்பதாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவால் கட்சி மாறுவதற்கு அணுகப்பட்டதாகக் கூறப்படும் எம்எல்ஏக்களை ஐக்கிய ஜனதா தள தலைமை நாளை நடைபெறவுள்ள அதன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னிலைப்படுத்த உள்ளது.
துணை முதலமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவருமான தர்கிஷோர் பிரசாத்துடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது, "தலைப்புச் செய்தியில் இடம்பெறும் வகையில் பிரச்னை தீவிரமாக எதுவும் இல்லை" என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு எதிராக செயல்பட்டதாகவும், கூட்டணி கட்சிகளை அவமரியாதை செய்வதாகவும் பாஜக மீது நிதிஷின் கட்சி கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. "பாஜக மட்டுமே இருக்கும், பிராந்தியக் கட்சிகள் மறைந்துவிடும்" என்று சமீபத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறிய கருத்தை நிதீஷ் குமாரின் ஆதரவாளர்கள் ஆதாரமாக மேற்கோள் காட்டி வருகின்றனர்.
முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், அவர் சமாதானம் அடையும் மனநிலையில் இல்லை. நாளை, அவர் தனது எம்எல்ஏக்கள் அனைவரையும் சந்தித்து அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து முடிவு செய்வார். எம்எல்ஏக்கள் இடைக்காலத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்றும், அந்த வாய்ப்பை விட புதிய கூட்டணியை விரும்புவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
நிதிஷ் குமார் பாஜகவை வீழ்த்தினால் அவருக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு அளிப்பார் என எதிர்க்கட்சிகள் இன்று தெரிவித்துள்ளன. சமீபத்தில் பிகாரில் லாலுவின் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை ஆட்சி அமைக்க போதுமானதாக உள்ளது.
டெல்லியில் அமர்ந்து கொண்டு பிகார் அரசை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர் அமித் ஷா முயற்சித்து வருவதாகவும் இதன் காரணமாகவே நிதிஷ் கோபம் அடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தனது எதிர்ப்பை பதிவு செய்ய, அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த பல முக்கிய கூட்டங்களை நிதிஷ் குமார் புறக்கணித்துள்ளார்.
நேற்று, தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பாட்னாவில் இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.
இந்த அரசியல் நெருக்கடியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்.சி.பி. சிங், சனிக்கிழமை மாலை நிதிஷ் குமாரின் கட்சியை விட்டு வெளியேறினார். மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்தார். ஆனால், அவரை அமித் ஷாவின் பினாமியாகவே நிதிஷ் குமார் பார்த்து வந்தார்.
ஊழல் செய்ததாக சிங் மீது அவரது சொந்த கட்சியே விமர்சனம் மேற்கொண்டிருந்தது. சமீபத்தில்தான், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்க ஐக்கிய ஜனதா தளம் மறுத்திருந்தது. இதன் காரணமாக, மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்