நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நான்கு நாட்களுக்கு முன்னதாக திங்கள்கிழமை முடிவடைந்தது. மக்களவையும் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய அமர்வு ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவடைய இருந்தது.


திட்டமிடப்பட்டதற்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே மாநிலங்களவையை ஒத்திவைத்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, ​​அமர்வு தொடர்பான விரிவான புள்ளிவிவரங்கள் மாநிலங்களவை செயலகத்தால் வெளியிடப்படும் என்றார். குடியரசு துணை தலைவர் வெங்கையாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.


தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்தை கதி சக்தி விஸ்வவித்யாலயா என்ற தன்னாட்சி மத்திய நிறுவனமாக மாற்றும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு இன்று அறிமுகப்படுத்தியது.


பல்கலைக்கழகத்தின் வரம்பை ரயில்வேதுறையை தாண்டி அனைத்து போக்குவரத்துத் துறையையும் உள்ளடக்கி, துறையில் பெரிய அளவிலான வளர்ச்சியை ஏற்படுத்தவும் நவீனமயமாக்குவதையும் மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா நோக்கமாக கொண்டுள்ளது. மக்களவையை காலவரையின்றி ஒத்திவைத்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த அமர்வு 16 நாட்கள் நடைபெற்றதாகவும் 7 சட்டங்களை நிறைவேற்றபட்டதாகவும் கூறினார்.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே, எதிர்க்கட்சியினரும், ஆளுங் கட்சியினரும் கடும் அமளியில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். இதன் உச்சகட்டமாக, விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்களவையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்பட 4 காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையிலிருந்து மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பின்னர், இது திரும்ப பெறப்பட்டது.


மொத்தமாக, இந்த அமர்வில், 23 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி போன்ற விவகாரங்களை முன்வைத்து எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், கேள்வி நேரத்தின்போது, ஆளும் கட்சியினர், எதிர்கட்சியினரிடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.


இந்த அமர்வில் நடைபெற்ற மற்றொரு கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம், சோனியா காந்தி, ஸ்மிருதி இரானிக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சர்ச்சைக்குரிய விதமாக பேசியது நாடாளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.


இச்சம்பவம் நாடாளுமன்றத்தில் விவாத பொருளாக மாற, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாஜக எம்பி ஒருவருடன் பேசுவதற்காக ஆளும் கட்சியினர் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்றார். அப்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலையிட்டபோது, ​​சோனியா காந்தி தன்னுடன் பேச வேண்டாம் என சொல்லியதாக கூறப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண