பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் (Nihish Kumar) 8ஆவது முறையாக பதவியேற்றுள்ளார். அவருக்கு பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.


கடந்த 22 ஆண்டுகளில் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் 8ஆவது முறையாகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இவருடன் பீகார் மாநில துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளார். பாஜகவுடன் இருந்த 17 ஆண்டுகால கூட்டணியை  முறித்துவிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளார் நிதிஷ் குமார். 


 






ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியான மகாதத் பந்தன் கூட்டணியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார்.


முன்னதாக தான் முதலமைச்சராக பதவியேற்பது குறித்துப் பேசிய நிதீஷ் குமார், “எங்களுக்கு ஏழு கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஆதரவு கடிதத்தில் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். மொத்தம் இரண்டு சுயேச்சைகள் உட்பட 164 எம்.எல்.ஏ.க்கள் புதிய அரசுக்கு ஆதரவளிக்க உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.


243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவையில், ஆர்ஜேடி தற்போது 79 எம்எல்ஏக்களுடன் தனிப் பெரிய கட்சியாக உள்ளது. JD(U) 45 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், காங்கிரஸ் 19 மற்றும் CPI(ML) தலைமையிலான இடது முன்னணி 17 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.


முன்னதாக புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிதீஷ் குமார் தனது கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை கூட்டிய சில மணி நேரங்களிலேயே பீகார் அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. “ பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. காவி கூட்டணி மரியாதை கொடுக்கவில்லை, சதி செய்கிறது” என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 


ராஜ் பவனுக்கு வெளியே நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற ஜேடி(யு) கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர் என்றும் தெரிவித்தனர். 






நேற்று முந்தினம், தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பாட்னாவில் இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.


இந்த அரசியல் நெருக்கடியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்.சி.பி. சிங், சனிக்கிழமை மாலை நிதிஷ் குமாரின் கட்சியை விட்டு வெளியேறினார். மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால், அவரை அமித் ஷாவின் பினாமியாகவே நிதிஷ் குமார் பார்த்து வந்தார். 


ஊழல் செய்ததாக சிங் மீது அவரது சொந்த கட்சியே விமர்சனம் மேற்கொண்டிருந்தது. சமீபத்தில்தான், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்க ஐக்கிய ஜனதா தளம் மறுத்திருந்தது. இதன் காரணமாக, மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.