நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெறவுள்ள நிலையில், பாஜக-வைச் சேர்ந்த சபாநாயகர் வி.கே.சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


பாஜக-வுடனான கூட்டணி முறிவு:


பீகாரில் 2020 -ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில்,  ஐக்கிய ஜனதா தளம் கட்சி மற்றும் பாஜக கூட்டணி பெரும்பாண்மையுடன் ஆட்சி பிடித்தது . முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஷ் குமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பாஜக-வுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக நிதிஷ் குமார் அறிவித்தார்.


இதையடுத்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடது சாரி கட்சிகளுடன் இணைந்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமாரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர். 


பெரும்பாண்மை:




இந்நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது, இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 243 எம்.எல்.ஏ-க்களை சட்டப்பேரவையில், ஆட்சியமைக்க பெரும்பான்மையாக குறைந்தபட்சம் 122 இடங்கள் தேவை. ஆனால், தற்போது நிதிஷ் குமாருக்கு 165 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிதிஷ் குமாரின் கூட்டணி கட்சிகள் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என கூறப்படுகிறது.


சபாநாயகர் ராஜினாமா:




இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பாஜக-வைச் சேர்ந்த சபாநாயகர், வி.கே.சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் எப்போதும் ஆளும் கட்சியை சேர்ந்தவரே இருப்பது வழக்கம் என்றாலும், இதற்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்த வி.கே.சின்ஹா, தற்போது தனது  பதவியை ராஜினாமா செய்து, அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.