திருநங்கைகளுக்கான சுகாதார திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கையெழுத்தானது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 


டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் உள்ள நாலந்தா ஆடிட்டோரியத்தில் கையெழுத்தானது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 


மூன்றாம் பாலித்தவர்கள் உரிமை, மரியாதையுடன் சமூகத்தில் சிறப்பான இடம் வழங்க சுகாதார திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் சமூக நலன் மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இந்த கூட்டு முயற்சி நாட்டிலேயே முதல் முறையாகும், இது நமது சமூகத்திற்கு ஒரு புதிய திசையை வழங்குவது மட்டுமல்லாமல், திருநங்கைகளுக்கு சரியான மற்றும் மரியாதைக்குரிய இடத்தை சமூகத்தில் வழங்குகிறது. 






திருநங்கைகள் பயன்பெற தேவையான தகுதி : 



  • பயனாளி ஒரு திருநங்கையாக இருக்க வேண்டும்

  • இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திருநங்கைகள் சான்றிதழ் அல்லது திருநங்கைகளுக்கான தேசிய போர்ட்டல் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

  • மத்திய/மாநில ஸ்பான்சர் திட்டங்களிலிருந்து இத்தகைய பலன்களைப் பெறாத அனைத்து திருநங்கைகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.


திருநங்கைகள் தொடர்பான விஷயங்களுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் திருநங்கைகளின் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. திருநங்கைகளை சமூகத்தில் முக்கிய அங்கீகாரம் கொண்டு வருவதற்காக அமைச்சகம் “திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019” ல் கொண்டு வரப்பட்டது. 






மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்  அமைச்சகம் சமீபத்தில் ’SMILE’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  இதில் திருநங்கைகள் சமூகத்திற்கான பல விரிவான நடவடிக்கைகள் பெற ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுடன் இணைந்து திருநங்கைகளுக்கு விரிவான மருத்துவத் தொகுப்பை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த முயற்சியின் கீழ், ஒவ்வொரு திருநங்கைக்கும் மருத்துவக் காப்பீடாக ஓராண்டுக்கு ரூ. 5 லட்சம் மற்றும் செலவு முழுவதுமாக அமைச்சகத்தின் கீழ் (SMILE) நிதியளிக்கும். இதனால் திருநங்கைகளுக்கான முழு செயல்முறையும் முற்றிலும் பணமில்லாமல் இருக்கும்.