வாழ்க்கையின் தடைகளை நீக்குவதாகக்கூறி ஆன்மீக குருவாக சொல்லப்பட்ட ஒருவர் பெண் ஒருவரை 7 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் பெங்களூரு காவல்நிலையத்தில் இது தொடர்பான புகாரை அளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரும் இது தொடர்பாக புகாரளித்துள்ளார். அவர் ஆன்மீக குருவென கூறப்பட்ட ஆனந்த மூர்த்தி மற்றும் அவரின் மனைவி லதா மீது புகாரளித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய தோழியின் வீட்டில் நடந்த பூஜை ஒன்றில் ஆனந்த மூர்த்தியை சந்தித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். அப்போது  வாழ்க்கையில் பல்வேறு தடங்கள் இருப்பதாகவும் பல பரிகார பூஜைகள் செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார் ஆனந்த மூர்த்தி.




 இதனை நம்பிய அப்பெண் அந்த ஆனந்த மூர்த்தியை தன் வீட்டில் வந்து பூஜை செய்யுமாறு கூறியுள்ளார். வீட்டுற்கு வந்து பூஜை செய்தவர் குடிக்க பானம் ஒன்றை கொடுத்துள்ளார். அதனைக் குடித்த பாதிக்கப்பட்ட பெண் மயக்கத்துக்கு சென்றுள்ளார். கண் விழித்து பார்த்தபோது நிர்வாணமாக படுக்கையில் கிடந்துள்ளார். அருகே அந்த ஆனந்த மூர்த்தியும் இருந்துள்ளார். ஆனந்த மூர்த்தியும், அவரது மனைவியும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளதை அப்பெண் தெரிந்துகொண்டுள்ளார். பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி தொடர்ந்து அப்பெண்ணுக்கு ஆனந்தமூர்த்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த விவகாரம் வெளியே தெரிந்துள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் சென்ற ஆனந்த மூர்த்தி தன் செல்போனில் இருந்த வீடியோவைக் காட்டி நீ அவளை திருமணம் செய்யக் கூடாது எனக் கூறியுள்ளார்.




பின்னர் இந்த விவகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயுக்கு தெரியவரவே இந்த விவகாரம் போலீசாரிடம் சென்றுள்ளது. அதேபோல பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனை சந்தித்த ஆனந்த மூர்த்தி பெண்ணை யாருக்கேனும் திருமணம் செய்ய முயற்சி செய்யக் கூடாது என்றும் அப்படி செய்தால் வீடியோவை பரப்பிவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்


இதேபோல மகாராஷ்டிராவில் சாமியாரின் பேச்சைக்கேட்டு மனைவியை நிர்வாணமாக அருவியில் குளிக்க வைத்த கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புனேவில் வசித்து வந்த தம்பதிகளுக்கு நீண்ட வருடங்களாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்துள்ளது. இதற்காக அவர்கள் பல்வேறு சிகிச்சை பெற்றும் அவர்களுக்கு குழந்தை பேறு இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, கோவில்களுக்கும் சென்று வந்த அவர்கள் மாந்திரீகர் ஒருவரை நேரில் சந்தித்துள்ளார்.மௌலானா பாபா ஜமாதர் என்ற அந்த மாந்திரீகர் அந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அருவி ஒன்றில் அந்த பெண் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் கூறிய அருவி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி ஆகும். மாந்திரீகரின் பேச்சைக் கேட்ட அந்த பெண்ணின் கணவரும், அவரது கணவரின் குடும்பத்தார் அந்த பெண்ணை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அருவிக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பலரின் முன்பு நிர்வாணமாக குளிக்க வைத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி கணவன் மீது போலீசில் புகாரளித்தார்