பிகார் அரசியல் பரபரப்பின் உச்சகட்டமாக பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அம்மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 8ஆவது முறையாக முதலமைச்சராக நேற்று பொறுப்பு ஏற்றார்.


நிதிஷ், பாஜகவுக்கிடையே சுமுகமான சூழல் நிலவவில்லை என்றாலும், கூட்டணியிலிருந்து விலகும் முடிவை நிதிஷ் ஏன் எடுத்தார் என்பது அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கேள்வியாக இருந்தது. இந்த கேள்விக்கு தற்போது பாஜகவிடமிருந்து விடை கிடைத்துள்ளது. 


குடியரசு துணை தலைவராக ஆக நிதிஷ் விரும்பியதாகவும் இதுதொடர்பாக அவரது கட்சி தலைவர்கள் சமிக்ஞை அனுப்பியதாகவும் பிகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் பாஜக எம்பியுமான சுஷில் குமார் மோடி பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.


இதுதொடர்பாக பேசிய அவர், "'நிதிஷ் குமாரை துணை குடியரசு தலைவராக்குங்கள். பீகாரில் நீங்களே ஆட்சியமைக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியினர் சிலர் என்னிடம் கூறினர்" என்றார்.


இதை முற்றிலுமாக மறுத்துள்ள நிதிஷ், "குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்தோம். நான் துணை குடியரசு தலைவராக விரும்பினேன் என கூறுவது முற்றிலும் நகைச்சுவையாக உள்ளது" என்றார்.


பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எதிர்வினை ஆற்றியுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் லால் சிங், "பாஜக உடனான உறவை முறித்துக் கொண்டால், எதிர்க்கட்சி குடியரசு தலைவர் அல்லது துணை குடியரசு தலைவர் வேட்பாளராக நிதிஷ் அறிவிக்கப்படுவார் என ஊடகங்களில் செய்தி வெளியானது. ​​​​அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் தெளிவாக மறுத்தது. அவர்கள் வெறும் கட்டுகதைகளை உருவாக்குகிறார்கள்" என்றார்.


பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பாஜகவுடனான கூட்டணியிலிருந்து நிதிஷ் விலகினார். குறிப்பாக, மகாராஷ்டிராவில் நடந்தது போல கட்சியை உடைக்க பாஜக முயற்சித்ததாக ஐக்கிய ஜனதா தளம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல, பாஜகவுடனான கூட்டணியின்போது, அமைச்சர்களை தேர்வு செய்வதில் தனக்கு அதிகாரம் தரப்பட வேண்டும் என நிதிஷ் விரும்பியாதக் கூறப்படுகிறது. 


தனக்கு நெருக்கமானவர்களை தேர்வு செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆதிக்கத்தை அரசு நிர்வாகத்தில் குறைத்த நிதிஷ் விரும்பியதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண