பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் நிதின் கட்கரி. கட்சியின் தலைவர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த இவர், தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர், கட்சியில் தேசிய அளவில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருகிறார்.


காங்கிரஸ் கட்சியில் இணைவாரா நிதின் கட்கரி?


முன்பு ஒருமுறை, காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கான வாய்ப்பு தனக்கு வந்ததை நினைவுகூர்ந்து பேசிய நிதின் கட்கரி, "அந்தக் கட்சியில் உறுப்பினராவதை விட கிணற்றில் குதித்து இறப்பதையே  விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.


மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி மகாராஷ்டிராவில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, தொடக்க காலத்தில் பாஜகவுக்காக பணி செய்ததையும் கட்சியின் பயணம் குறித்தும் நினைவுகூர்ந்தார்.


தொடர்ந்து பேசிய அவர், "60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் செய்ததை விட இரண்டு மடங்கு பணிகளை பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் செய்துள்ளது" என்றார்.


காங்கிரஸ் கட்சியில் சேரும்படி மறைந்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீகாந்த் ஜிச்கர் தனக்கு அழைப்பு விடுத்ததை நினைவுகூர்ந்து பேசிய நிதின் கட்கரி, "நீங்கள் ஒரு நல்ல கட்சித் தொண்டர் மற்றும் தலைவர், நீங்கள் காங்கிரஸில் சேர்ந்தால், உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என ஜிச்கர் ஒருமுறை என்னிடம் சொன்னார். 


ஆனால், காங்கிரஸில் சேர்வதை விட கிணற்றில் குதிப்பதே சிறந்தது என்றும், பாஜக மீதும், அதன் சித்தாந்தத்தின் மீதும் எனக்கு வலுவான நம்பிக்கை இருப்பதால், அதற்காக தொடர்ந்து உழைப்பேன் என்றும் அவரிடம் கூறினேன்.


"நல்ல விழுமியங்களை விதைத்த ஆர்எஸ்எஸ்"


ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ABVP) பணியாற்றிய போது, ​​ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் எனது இளமைக் காலத்தில் என் மீது நல்ல விழுமியங்களை விதைத்தது" என்றார்.


காங்கிரஸ் கட்சி குறித்து பேசிய அவர், "கட்சி உருவானதில் இருந்து கட்சி பலமுறை பிளவுபட்டது. நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த காலத்திலிருந்து நாம் எதிர்காலத்திற்கு பாடம் கற்க வேண்டும். 60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்தை வழங்கியது. ஆனால், தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கல்வி நிறுவனங்களைத் திறந்தது.


சில நாட்களுக்கு முன்பு நான் உத்தரபிரதேசத்தில் இருந்தபோது, ​​2024ஆம் ஆண்டு இறுதிக்குள் உ.பி.யில் உள்ள சாலைகள் அமெரிக்காவில் உள்ளதைப் போல இருக்கும் என்று மக்களிடம் கூறினேன்" என்றார்.