Nitin Gadkari: பிரதமர் ஆகும் ஆசை தனக்கு இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.


நிதின் கட்கரி விளக்கம்:


மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, எதிர்க்கட்சிகள் தன்னை பிரதமராக்குவதாக அளித்த வாய்ப்பு தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து விளக்கமளித்ததோடு, அத்தகைய லட்சியங்களை தான் கொண்டிருக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ "எனக்கு (எதிர்க்கட்சியால் பிரதமர் பதவி) வாய்ப்பு வழங்கப்பட்டபோது, ​​​​நீங்கள் ஏன் நான் பிரதமராக இருக்க விரும்புகிறீர்கள், நான் ஏன் பிரதமருடன் (மோடி) இருக்கக்கூடாது என்று அவர்களிடம் கேட்டேன். மேலும், பிரதமராவது  எனது லட்சியம் அல்ல" என்று கூறியதாக நிதின் கட்கரி பேசினார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான அவர், மக்களவை தேர்தலுக்கு முன்பும், அதற்குப் பின்னரும் எதிர்க்கட்சிகளின் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


மோடிக்கு மாற்று நிதின் கட்கரி?


 பிரதமர் மோடி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பும்போது, அவருக்கு மாற்றாக நித்டின் கட்கரி இருப்பாரா என கேள்வி எழுப்பட்டது. அதற்கு, "நான் எந்த பதவிக்கான பந்தயத்திலும் இல்லை. எனது பயோடேட்டாவை யாருக்கும் கொடுக்கவில்லை. நான் எனது பணியை செய்து வருகிறேன். நான் இருக்கும் இடத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விஷயங்களைப் பற்றி பிரதமர் மோடியிடமோ அல்லது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்திடம் (ஆர்எஸ்எஸ்) சென்று கேளுங்கள்" என்று நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.


தொடர்ந்து பாஜகவில் தனது பங்கு குறித்து பேசிய நிதின் கட்கரி, "நான் கட்சியின் தொண்டன் மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர். அமைச்சராக இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன். சமூகப் பொருளாதாரத்தின் கருவியாக அரசியலை நான் எப்போதும் உணர்கிறேன். சீர்திருத்தம் செய்து கொண்டே இருப்பேன், எதற்கும் கவலைப்பட மாட்டேன்” என கூறினார்.


தொடர் விவாதத்தில் நிதின் கட்கரி பெயர்:


2024 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் நிதின் கட்கரியின் பெயர் சாத்தியமான பிரதமர் வேட்பாளராக விவாதிக்கப்பட்டது. இந்தியா டுடே கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய, தேசத்தின் மனநிலை என்ற தலைப்பிலான கருத்து கணிப்பில், நரேந்திர மோடிக்குப் பிறகு பிரதமராக வருவதற்கு மிகவும் பொருத்தமான மூன்றாவது தலைவராக கட்காரி பார்க்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த இடத்தை பிடித்து இருந்தார்.