நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அயோத்தியில் பாஜகவை வீழ்த்தியதன் மூலம் பிரதமர் மோடிக்கு கடவுள் பாடம் புகட்டியதாக ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


ஹரியானாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி, ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து, வரும் அக்டோபர் 8ஆம் தேதி, ஹரியானா தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.  


"கடவுளிடம் நேரடியாக பேசும் மோடி"


கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாத அதன் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 


இந்த நிலையில், கர்னல் மாவட்டம் அசாந்த் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். "சமீப நாள்களாக பிரதமர் மோடியின் முகத்தை பார்த்தீர்களா? முன்பெல்லாம் தனக்கு 56 அங்குல மார்பு இருப்பதாக கூறி வந்த அவர், தற்போது கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.


அவர் பீதியடைந்துள்ளார். நாட்டு மக்களை எல்லாம் உயிரினம் என சொல்கிறார். ஆனால், தான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை என்கிறார். அவர் நேரடியாக கடவுளிடம் பேசுவதாக கூறுகிறார். ஆனால் (லோக்சபா) தேர்தலில் கடவுள் அவருக்கு பாடம் கற்பித்துவிட்டார். 


காங்கிரஸ் வாக்குறுதிகள்:


உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பாஜக வேட்பாளரை அவதேஷ் சிங் (சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்) தோற்கடித்தார். மோடி என்ன செய்கிறார்? உங்களிடம் உள்ள விவசாய நிலத்தை அதானிக்கு கொடுக்கிறார். ஹரியானா விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது. ஆனால், அவர் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார்.


பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.500 எரிவாயு வழங்குவோம். இளைஞர்களுக்கு 2 லட்சம் வேலைகள் வழங்குவோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதமும், பயிர் அழிந்தால் காப்பீட்டுத் தொகையும், ஏழைகளுக்கு வீடுகளும் வழங்குவோம். இந்தியாவின் நலிந்த பிரிவினருக்கு உரிமை வழங்கும் அரசியல் சாசனத்தை பாஜகவினர் சீரழித்துள்ளனர்" என்றார்.