அடிப்படை வசதிகளை கேட்டு மக்கள் மனு கொடுப்பதை பிச்சை கேட்பது போல் உள்ளது என பாஜக அமைச்சர் பிரஹலாத் படேல் கூறி இருப்பது சரச்சையை கிளப்பியுள்ளது. பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மத்தியப் பிரதேச பாஜக தலைவர், இம்மாதிரியான கருத்தை கூறி இருக்கிறார்.
"அரசிடம் பிச்சை எடுக்கும் மக்கள்"
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் மகாராணி அவந்திபாய் லோதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய பிரதேச மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பிரஹலாத் படேல், "அரசாங்கத்திடம் மக்கள் பிச்சை எடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
தலைவர்கள் வருகிறார்கள், அவர்களுக்கு ஒரு கூடை நிறைய மனுக்கள் கொடுக்கப்படுகின்றன. அவர்களுக்கு மேடையில் மாலை அணிவிக்கப்படுகிறது. அவர்களின் கைகளில் ஒரு கடிதம் அளிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல பழக்கம் அல்ல.
கேட்பதற்கு பதிலாக, கொடுக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். இது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். பண்பட்ட சமூகத்தை உருவாக்க உதவும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இலவசங்களை அதிகமாகச் சார்ந்திருப்பது சமூகத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அதைப் பலவீனப்படுத்துகிறது.
"பாஜகவின் ஆணவம்"
பிச்சைக்காரர்களின் படை சமூகத்தை வலிமையாக்கவில்லை. அது அதை பலவீனப்படுத்துகிறது. இலவசப் பொருட்களின் மீதான ஈர்ப்பு துணிச்சலான பெண்களுக்கான அடையாளமல்ல. எப்போதாவது பிச்சை எடுத்த தியாகியின் பெயரை யாரையாவது சொல்ல முடியுமா? அப்படியானால், சொல்லுங்கள்" என பேசியுள்ளார்.
பாஜக அமைச்சரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமைச்சரின் கருத்துக்களை விமர்சித்த மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜீது பட்வாரி, இது மாநில மக்களை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.
"பாஜகவின் ஆணவம் இப்போது பொதுமக்களை பிச்சைக்காரர்கள் என்று அழைக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. கஷ்டங்களுக்கு மத்தியில் போராடுபவர்களின் நம்பிக்கைகளுக்கும் கண்ணீருக்கும் இது அவமானம். அவர்கள் தேர்தலுக்கு முன்பு பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு, பின்னர் அவற்றை நிறைவேற்ற மறுக்கிறார்கள்.
மக்கள் அவர்களை நினைவுபடுத்தும்போது, வெட்கமின்றி அவர்களை பிச்சைக்காரர்கள் என்று அழைக்கிறார்கள். அவர்கள் நினைவில் கொள்ளட்டும். விரைவில், இந்த பாஜக தலைவர்களும் வாக்குகளைப் பிச்சை எடுக்க வருவார்கள்" என மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.