கடந்த 2020ஆம் ஆண்டு, கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதல் இரு நாட்டு உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் நுழைந்து ஆக்கிரமித்ததாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.


சீன விவகாரத்தில் அமைதி காக்கும் பிரதமர்: காங்கிரஸ்


இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பதாக காங்கிரஸ் கட்சி சாடி வருகிறது. இதற்கு பதிலடி அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் முதல் பிரதமர் நேரு வடகிழக்கு பிராந்தியத்தை கைகழுவிவிட்டதாக விமர்சித்துள்ளார். 


இதுகுறித்து விரிவாக பேசிய மத்திய அமைச்சர், "கடந்த 1962ஆம் ஆண்டு, ஒட்டுமொத்த வடகிழக்கும் அதன் விதியை அதுவே தீர்மானித்து கொள்ள தனித்துவிடப்பட்டது. வடகிழக்கு பிராந்தியத்தை கைகழுவிட்டவர் நேரு.


அருணாச்சல பிரதேசத்திற்குள் சீனர்கள் வருவதை நாங்கள் தடுத்துள்ளோம். எங்கள் செயல் அதைச் சொல்கிறது. எனவே அவர்கள் (காங்கிரஸ்) 'ஐயோ, பிரதமர் பேசவில்லை. அவர்களின் முதல் பிரதமர், நமது முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு கூறியதை அவர் (ராகுல் காந்தி) தயவுசெய்து சரிபார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வடகிழக்கை கை கழுவிவிட்டவர் நேரு.


பதிலடி தந்த மத்திய அமைச்சர் நிர்மலா:


அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமின் சில பகுதிகளுக்குப் பயணம் செய்தால், மக்களே இதை சொல்வார்கள். அருணாச்சல பிரதேசத்தில் வாழும் மக்கள் இந்தியாவுடன் சீருடன் இருக்கின்றனர். ஒவ்வொரு சீனரும் வெளியேற வேண்டும்" என்றார்.


சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம். இந்த பகுதி, தங்களுடையது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதை, திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான் என சீனா அழைக்கிறது.


இதற்கிடையே, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சீனா சூட்டி உள்ளது. இந்த புதிய பெயர்கள் சீன, திபெத்திய மற்றும் பின்யின் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.


சீன அரசின் இந்த செயலை இந்திய அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. ''சீனா இது போன்ற அடாவடிகளில் ஈடுபடுவது முதல்முறை அல்ல; இதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை" என வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார்.


இது குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கேரைன் கூறுகையில், "அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நீண்ட காலமாக அமெரிக்கா அங்கீகரித்து வருகிறது. மேலும், அங்குள்ள இடங்களின் பெயரை மாற்றுவதன் வாயிலாக, பிராந்திய உரிமை கோரும் எந்தவொரு ஒருதலைப்பட்சமான முயற்சியையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக உள்ளோம்" என்றார்.