நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில், மார்ச் 13ஆம் தேதி இரண்டாவது பாதி தொடங்கப்பட்டு இன்று நிறைவு பெற்றுள்ளது.


முடங்கி போன நாடாளுமன்றம்:


இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை நடைபெறாத அளவுக்கு இரு அவைகளும் பெரிய அளவில் முடக்கம் கண்டது. கூட்டத்தொடர் முழுவதுமே, ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தை முன்வைத்தும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக் கோரியும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.


எதிர்க்கட்சியினருக்கு இணையாக, ஆளுங்கட்சி உறுப்பினர்களும் இந்த கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டனர். லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.


இதன் காரணமாக, மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாத அளவுக்கு நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.


இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சௌக் வரை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று பேரணியாக சென்றனர். பின்னர், எதிர்க்கட்சிகள் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.


அரசின் நோக்கம் இதுதான்:


அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பட்ஜெட் கூட்டத்தொடரை ரத்து செய்வதே அரசின் நோக்கமாக இருந்தது. அரசாங்கம் ஜனநாயகம் பற்றி நிறைய பேசுகிறது. ஆனால், சொல்வதை அது பின்பற்றவில்லை. எதிர்க்கட்சிகளோ ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்காக ஒன்றிணைந்து போராடுகிறது.


50 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் வெறும் 12 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவர்கள் (பாஜக) எதிர்க்கட்சிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்று எப்போதும் குற்றம் சாட்டுகிறார்கள். தொடர்ந்து அவையை குழப்புகிறார்கள். ஆளுங்கட்சியால் குழப்பம் ஏற்பட்டது. எப்பொழுது கோரிக்கை வைத்தாலும் பேச அனுமதிக்கப்படவில்லை. 


52 ஆண்டுகால எனது பொதுவாழ்வில் இப்படி முதல்முறையாக நடந்துள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரை ரத்து செய்வதே அரசின் நோக்கம். இந்த அணுகுமுறையை நாங்கள் கண்டிக்கிறோம். இது தொடர்ந்தால், ஜனநாயகம் முடிந்து சர்வாதிகாரத்தை நோக்கி செல்வோம்.


18 முதல் 19 எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை எழுப்பினார்.2 முதல் 2.5 ஆண்டுகளில் அவரது சொத்து எப்படி ₹ 12 லட்சம் கோடியாக அதிகரித்தது. பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கும் போது கூட பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையை அமைக்க நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். ஏதோ விசித்திரமாக உள்ளது. அதானி விவகாரத்தில் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிட அரசு சம்மதிக்கவில்லை" என்றார்.