காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.கே. ஆண்டனி. கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான இவர், கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை, அம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.


காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அணில் ஆண்டனி:


இவரின் மகன் அணில் ஆண்டனி, கடந்த ஜனவரி மாதம், பிபிசி ஆவணப்படம் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.


இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பியூஷ் கோயல் முன்னிலையில், அணில் ஆண்டனி பாஜகவில் இன்று இணைந்துள்ளார்.


கடும் வேதனையை தந்துள்ளது:


தனது மகன் பாஜகவில் இணைந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ள ஏ.கே. ஆண்டனி, "அவர் (மகன்) எடுத்திருப்பது தவறான முடிவு. எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. பாஜக மற்றும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) சித்தாந்தத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.


இது நாட்டை பிளவுபடுத்தும். ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலவீனப்படுத்தும். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் செயல்திட்டத்தை எப்பொழுதும் எதிர்க்கிறேன். எனது கடைசி மூச்சு வரை அதைத் தொடர்ந்து செய்வேன். காங்கிரஸ் கட்சிக்கும், நேரு-காந்தி குடும்பத்துக்கும் விசுவாசமாக இருப்பேன். 


இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருந்ததற்கும், அதன் பன்முகத்தன்மையை மதித்ததற்குமான பெருமை நேரு காந்தி குடும்பத்தையே சாரும். என்னை அரசியலில் சேர ஊக்குவித்த இந்திரா காந்தியால் தான் ஈர்க்கப்பட்டேன். கொள்கைப் பிரச்சினையில் அவருடன் ஒரே ஒரு முறை கருத்து வேறுபாடு கொண்டேன். பின்னர் கட்சிக்குத் திரும்பினேன். அவரை மேலும் மதிக்கிறேன்.


எனது அரசியல் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் உள்ள நான் இன்னும் எவ்வளவு காலம் வாழ்வேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் இருக்கும் வரை காங்கிரசுக்காக வாழ்வேன்" என்றார்.


முன்னதாக, பாஜகவில் இணைந்த பிறகு காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய அணில் ஆண்டனி, "ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் தாங்கள் ஒரு குடும்பத்திற்காக உழைக்கிறோம் என்று நம்புகிறார்கள்.


ஆனால், நான் நாட்டிற்காக உழைக்கிறேன் என்று நம்புகிறேன். பல துருவ உலகில் இந்தியாவை ஒரு முன்னணி இடத்தில் வைப்பதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகத் தெளிவான பார்வை உள்ளது" என்றார்.


மேலும் படிக்க:


KKR vs RCB, IPL 2023 LIVE: டாஸ் வென்ற ஆர்.சி.பி...! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா கொல்கத்தா..?