இந்து குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி நேற்று திடீரென விலகினார். இந்து குழுமத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் ராஜிநாமா செய்தார். இது ஊடக உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குழுமத்தின் அடுத்த தலைவராக யார் வருவார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது.
இந்து குழுமத்தின் புதிய தலைவராக நிர்மலா லட்சுமணன் நியமனம்:
இந்நிலையில், இந்து குழுமத்தின் நிர்வாக குழுவுக்கு புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் நிர்மலா லட்சுமணன் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பின்-நவீனத்துவ இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற நிர்மலா லட்சுமணன், இந்து குழுமத்தில் ஆசிரியர், கட்டுரையாளர், வியூக வகுப்பாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இந்து குழுமம் சார்பில் நடத்தப்படும் 'லிட் ஃபார் லைஃப்' இலக்கிய விழாவை தொடங்கி நடத்தி வருபவர் நிர்மலா லட்சுமணன். இந்து குழுமத்தின் இணை ஆசிரியராக நிர்மலா பதவி வகித்தபோது, பல்வேறு சிறப்பு நாளிதழ்களை மீண்டும் வெளியிட செய்து பெயர் பெற்றார். 'தி இந்து லிட்ரரி ரிவ்யூ', 'யங் வேர்ல்ட்', 'தி இந்து இன் ஸ்கூல்' போன்ற சிறப்பு நாளிதழ்கள் நிர்மலா லட்சுமணனின் வழிகாட்டுதலில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:
'இந்து தமிழ் திசை'யின் வெளியீட்டாளரான கஸ்தூரி மீடியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் நிர்மலா லட்சுமணன் பதவி வகித்துள்ளார். தற்போது, இந்து குழுமத்தின் தலைவராக நிர்மலா லட்சுமணன் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தி இந்து குரூப் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட்டின் தலைவராக நிர்மலா லக்சுமணன் நியமிக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சிறந்த கல்வித் தகுதிகள் மற்றும் ஆசிரியராக வளமான அனுபவத்துடன், அவர் தனது புதிய பாத்திரத்தில் பிரகாசிப்பார் என்று நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய மாலினி பார்த்தசாரதி, தான் விலகியதற்கான காரணத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதில், "எனது கருத்துகளை தெரிவிப்பதற்கான வாய்ப்பு குறைந்து வருவதால், தி இந்து குழுமப் பதிப்பகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளேன்.
எனது முயற்சிகள் நமது செய்திகளை கருத்தியல் சார்புகளிலிருந்து விடுவிப்பதாக இருந்தது. எனது முயற்சிகளுக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், நான் இங்கிருந்த செல்ல முடிவு செய்துள்ளேன். இந்த சவாலான பயணத்திற்கு உறுதுணையாக இருந்த எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டிருந்தார்.