ரூ.5 லட்சம் மற்றும் 10 கிராம் தங்கப் பதக்கம் பெறும் வகையில், தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது மற்றும் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ விருதுகள் தனித்தனியே அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று காணலாம்.


கல்பனா சாவ்லா விருது


துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது" ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழக முதலமைச்சரால்‌, சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில்‌, ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ்‌ மற்றும்‌ பதக்கம்‌ அடங்கும்‌.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துணிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்த பெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இந்த விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌.


2023-ஆம்‌ ஆண்டிற்கான துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான "கல்பனா சாவ்லா" விருதுக்கு பரிந்துரைகள்‌ கோரப்படுகின்றன. துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள்‌ / பரிந்துரைகள்‌ இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ மட்டுமே பெறப்படும்‌. 


கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள்‌ / பரிந்துரைகள்‌ இணையதளத்தில்‌ அதற்கென உள்ள படிவத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும்‌, விருதுக்காக பரிந்துரைக்கப்படும்‌ நபர்களின்‌ துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களைப்‌ பற்றி எடுத்துரைக்கும்‌ தகுதியுரை (அதிகபட்சம்‌ 800 வார்த்தைகளுக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌) தெளிவாகவும்‌, தேவையான அனைத்து விவரங்களும்‌ முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்‌.


துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான "கல்பனா சாவ்லா" விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்‌ 30 ஜூன்‌ 2023 ஆகும்‌.இணையதளத்தில்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ / பரிந்துரைகள்‌ மட்டுமே பரிசீலிக்கப்படும்‌. உரிய காலத்திற்குள்‌ பெறப்படாத விண்ணப்பங்கள்‌ கண்டிப்பாக நிராகரிக்கப்படும்‌. பதக்கம்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்கள்‌, இதற்கென அரசால்‌ நியமிக்கப்பட்ட தேர்வுக்‌ குழுவால்‌ தெரிவு செய்யப்படுவர்‌.


கூடுதல் விவரங்களுக்கு: https://awards.tn.gov.in/notify_document_upload/28/2_2023_28_Notification.pdf


*


 சிறந்த சமூக சேவகர்‌ விருது


சுதந்திர தின விழாவின்‌போது பெண்களின்‌ முன்னேற்றத்துற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனத்துற்கான விருதுகள்‌ தமிழக முதலமைச்சரால்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ வழங்கப்பட்டு வருகிறது.


இதில் சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம்‌ எடையுள்ள தங்கப் பதக்கம்‌ மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்துற்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசுடன்‌, 10 கிராம்‌ எடையுள்ள தங்கப் பதக்கம்‌ மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.


இதனைத்‌ தொடர்ந்து 2023 ஆம்‌ ஆண்டு சுதந்திர தின விழாவின்போது பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ வழங்கப்பட உள்ளன. 


விண்ணப்பிப்பது எப்படி?


தமிழக அரசின்‌ விருதுகள்‌ இணைய தளத்தில்‌ (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும்‌ ஆங்கிலத்தில் ‌10.06.2023 வரை தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


கூடுதல் விவரங்களுக்கு: https://awards.tn.gov.in/notify_document_upload/32/5_2023_32_Notification.pdf