டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது தலித் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி புராணா நங்கல் பகுதியில் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது.


தண்ணீர் பிடிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவலம்...


புராணா நங்கல் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி. இச்சிறுமி கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் தனது வீட்டருகே உள்ள மாயானத்தில் அமைக்கப்பட்டுள்ள கூலரில் தண்ணீர் பிடிக்கச் சென்றார். ஆனால், வெகு நேரமாகியும் கூட அவர் திரும்பவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண்ணின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
மறுமுனையில் பேசிய பூஜாரி ஒருவர், அந்தப் பெண்ணிடம் உடனே மின்மயானத்துக்கு வரவும், இங்கே உங்களின் மகளுக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று கூறியுள்ளார்.


அந்தப் பெண்ணும் பதறிக்கொண்டு அங்கே சென்று பார்க்க சிறுமியின் மணிக்கட்டு, முழங்கையில் மின்சாரம் பாய்ந்து காயம் ஏற்பட்டிருந்தது. சிறுமியின் உதடுகளில் நீலம் பாய்ந்திருந்தது.


அப்போது அந்த பூஜாரி, சிறுமியின் தாயிடம் இது குறித்து போலீஸில் தெரிவிக்க வேண்டாம். போலீஸில் சொன்னால் அவர்கள் உன் குழந்தையின் சடலத்தை உடற்கூராய்வுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். பிரேதப் பரிசோதனையின் போது உடல் உறுப்புக்களை திருடிக் கொள்வர், ஆகையால் போலீஸுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய சிறுமியின் தாயாரும் போலீஸில் சொல்லவில்லை. மயானத்திலேயே அவசர அவசரமாக பிரேதத்தை எரித்துள்ளனர். ஆனால், விஷயம் ஊருக்குள் பரவவே, ஊர் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.


இந்த வழக்கில் ராதேஷ்யாம், குல்தீப். லக்‌ஷ்மி நாராயண், சலீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராதே ஷ்யாம் தான் பூஜாரி. மற்ற மூவருக்கும் சிறுமியின் தாயாருடன் பழக்கம் இருந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த 4 பேரின் மீதும் சட்டப்பிரிவுகள் 304, 342, 24, 34 ஆகியனவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
பின்னர், சட்டப்பிரிவுகள் 302, 376ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பாய்ந்துள்ளது. சிறுமியின் பக்கத்துவீட்டுப் பெண் சம்பவத்தன்று மயானத்தில் நடந்த காட்சிகளை சிசிடிவி ஆதாரம் மூலம் கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளார்.


அந்தப் பெண் போலீஸாரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது மினாரம் பாய்ந்து நடந்த விபத்து என்றால் ஏன், சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 6 மணிக்குப் பின்னர் அவசரமாக பிரேதத்தை எரிக்க வேண்டிய அவசியமென்னவென்று கேள்வி எழுப்பினார். இது பாலியல் பலாத்காரம், படுகொலை என நான் சந்தேகப்படுகிறேன் என்று கூறினார்.


மயானத்தில் இருந்து போலீஸார் தடயங்களை சேகரித்துள்ளனர். 


தலைவர்கள் கண்டனம்:


இதற்கிடையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இந்த சம்பவத்தை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், "டெல்லியில் சட்டம் ஒழுங்கை இன்னும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை நான் நாளை நேரில் சந்தித்து அவர்களுக்கு நீதி கிடைக்க ஆவண செய்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.


அதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் தனது கண்டனக் குரலைப் பதிவு செய்துள்ளார். "ஒரு தலித்தின் மகளும் இந்த தேசத்தின் மகளே" என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட குழந்தையின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.