Governers Appoinment: கோவையை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் மகாராஷ்ட்ரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


9 மாநில ஆளுநர்கள் நியமனம்:


குடியரசு தலைவர் திரவுபதி முர்மு,  ஒன்பது மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.  அவர்கள் பொறுப்பேற்கும் நாளில் இருந்து நியமன தேதிகள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி, 



  • தெலுங்கானாவுக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநராக உள்ள சிபி ராதாகிருஷ்ணன், இனி  மகாராஷ்டிராவின் ஆளுநராக இருப்பார். கோயம்புத்தூரில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் முன்னாள் தமிழக பாஜக தலைவர் ஆவார். மக்களவை தேர்தலில் பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்த மற்றொரு மாநிலம் மகாராஷ்ட்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

  • 2013 முதல் 2014 வரை குஜராத்தில் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே கைலாசநாதன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதனிடையே, தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைய உள்ளது. அவர் மாற்றப்படுவாரா அல்லது புதிய அளுநர் நியமிக்கப்படுவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


வடமாநிலங்களில் புதிய ஆளுநர்கள்:



  • பரேலியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றும், சமீபத்திய மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரான சந்தோஷ் கங்வார் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் குர்மி இனத்தைச் சேர்ந்த ஓபிசி ஆவார்,

  • சத்தீஸ்கர் மாநில ஆளுநராக அசாம் மாநிலத்தின் முன்னாள் லோக்சபா எம்.பி., ராமன் தேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மகாராஷ்ட்ரா மாநில சட்டசபையின் முன்னாள் சபாநாயகரும், பாஜக தலைவருமான ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

  • காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா ஆளுநராக, பாஜகவை சேர்ந்த திரிபுராவின் முன்னாள் துணை முதலமைச்சர் ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ராஜஸ்தானின் மூத்த பாஜக தலைவரும், மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான ஓ.பி.மாத்தூர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • கர்நாடகாவின் முன்னாள் மக்களவை உறுப்பினர் சி.எச்.விஜய்சங்கர், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து 2019ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவில் இணைந்த நிலையில், அவர் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை இந்திய குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார் .

  • அசாம் மாநில ஆளுநரான குலாப் சந்த் கட்டாரியா, பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரான கட்டாரியா இதற்கு முன்பு ராஜஸ்தானில் அமைச்சராக இருந்தவர்.

  • சிக்கிம் கவர்னரான லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் கவர்னராக நியமிக்கப்பட்டு, மணிப்பூர் கவர்னராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. பாஜக தலைவரான ஆச்சார்யா உத்தரப் பிரதேசத்தில் எம்எல்சியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.