அடுத்த 12 மாதங்களில், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 100 சதவிகித தொலைத்தொடர்பு சேவையை கொண்டு வருவது மத்திய அரசின் இலக்கு என மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
"24,000 கிராமங்களில் 100 சதவிகித தொலை தொடர்பு சேவை" இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, "இதற்காக அமைச்சரவையால் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு வாரமும் பணியின் முன்னேற்றத்தை நானே கண்காணித்து வருகிறேன்" என்றார்.
தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "100 சதவீதம் சென்று சேர்வதில் பிரதமர் உறுதியாக உள்ளார். தொலைத்தொடர்பு இணைப்புக்காக இன்னும் 24,000 கிராமங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்த அனைத்து கிராமங்களையும் சென்றடைவதற்கான சிறப்புத் திட்டமும், இதற்காக அனுமதிக்கப்பட்ட நிதியும் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பகுதிகளும் இதில் அடக்கம். மேலும், இந்த இடங்களை அடைய உத்திகள் வகுக்கப்படுகின்றன. புதிய தொலைத்தொடர்புச் சட்ட விதிகள், தேவையான உள்கட்டமைப்பை அமைப்பதற்கும், வி-சாட் மற்றும் செயற்கைக்கோள் போன்ற கலப்பு தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கும் உதவி புரிந்துள்ளன. தொலை தொடர்பு சேவைகளை அடுத்த 12 மாதங்களில் 100 சதவிகிதம் கொண்டு சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் தகவல்: நான் வாரந்தோறும் பணிகளைக் கண்காணித்து வருகிறேன். ஏற்கனவே, 13,000-14,000 கிராமங்களில் 100 சதவிகித தொலை தொடர்பு சேவை சென்று சேர்க்கப்பட்டுள்ளது" என்றார்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பேசிய சிந்தியா, "கடந்த 75 வருடங்களாக வடக்கு கிழக்கு மாநிலங்கள் அனாதை போல் நடத்தப்பட்டது. ஆனால், இப்பகுதியை வளர்ச்சியின் இயந்திரமாக மாற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார்.
அசாம் மற்றும் சிக்கிமில் வெள்ள மேலாண்மைக்காக சுமார் ரூபாய் 11,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் விதிகளின்படி இப்பகுதியில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் 100 புதிய கிளைகள் தொடங்கப்படும்.
பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களால் இப்பகுதி பலன் அடையும். முறையான உள்கட்டமைப்புடன், பெரிய தொழில்துறை திட்டங்கள் விரைவில் இப்பகுதியில் கொண்டு வரப்படும்" என்றார்.