Assam CM: பகவத் கீதை தொடர்பான சமூக வலைதள பதிவு மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த தவறால், சர்ச்சையானதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த சர்மா விளக்கமளித்துள்ளார்.
சர்ச்சையான பதிவு:
ஒவ்வொரு நாளின் காலையிலும் பகவத் கீதையின் ஒரு வாக்கியத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுவதை, அசாம் முதலமைச்சர் ஹிமந்த சர்மா வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த 26ம் தேதி வெளியிட்ட பதிவில், “பகவத் கீதையின்படி, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய மூன்று சாதியினருக்கும் சேவை செய்வது சூத்திரர்களின் இயற்கையான கடமை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த பதிவு சாதிப் பிரிவினையை ஊக்குவிப்பதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்தார். தங்களது கனவு உலகம் தொடர்பான உண்மையை ஹிமந்த பிஸ்வா வெளிப்படையாகப் பேசியுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
மன்னிப்பு கோரினார் அசாம் முதலமைச்சர்:
தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியான பகவத் கீதையில் இருந்த ஒரு வசனத்தின் தவறான மொழிபெயர்ப்பு பதிவிற்கு, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பான பதிவில், ”எனது குழு உறுப்பினர் ஒருவர் ஸ்லோகனின் தவறான மொழிபெயர்ப்பைப் பதிவிட்டுவிட்டார்.
நான் தவறைக் கவனித்தவுடன் உடனடியாக பதிவை நீக்கிவிட்டேன். அசாம் மாநிலம் சாதியற்ற சமுதாயத்தின் சரியான படத்தை பிரதிபலிக்கிறது, மகாபுருஷ் ஸ்ரீமந்த சங்கர்தேவா தலைமையிலான சீர்திருத்த இயக்கத்திற்கு நன்றி. நீக்கப்பட்ட அந்த பதிவு யாருடைய மனதையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்தான், மொழி பெயர்ப்பில் பிழை ஏற்பட்டதாகவும், தனது பதிவிற்கு மன்னிப்புக் கோருவதாகவும் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.